வாய்ந்ததாகும். இருண்டகாலம் கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்திற்குப் பிறகு கி.பி. 600 வரையிலுள்ளது இருண்டகாலமாகும். எனவே, இது கி.பி. 250 முதல் கி.பி. 600 வரையில் அமைந்த ஒரு காலப் பகுதியாம். இக்காலப் பகுதியில் தமிழ்நாடு களப்பிரர், பல்லவர் ஆகிய அந்நியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தமையால், தமிழ் மொழி போற்றுவாரற்று, வளர்ச்சி யடையாமல் தாழ்ந்த நிலையை அடைந்தது. பிற மொழியாளராகிய அயலாரது ஆளுகையில் தமிழ்ப் புலவர்கட்கு ஆதரவின்மையால் சிறந்த தமிழ் நூல்கள் தோன்றுவதற்கு இடமில்லாமற் போயிற்று. எனினும், அந்நியர்களின் கூட்டுறவினால் சிதையத் தொடங்கிய தமிழ் மக்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் காப்பாற்றும் பொருட்டு அறிஞர் சிலர், இக்காலப் பகுதியில் சில நீதி நூல்கள் இயற்றி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. - அவை 1 விளம்பிநாகனாரது நான்மணிக்கடிகையும், கபிலரது இன்னாநாற்பதும், பூதஞ்சேந்தனாரது இனியவை நாற்பதும், நால்லாதனாரது திரிகடுகமும் ஆகும். அரசாங்க ஆதரவோடு தம் சமயத்தைப் பரப்பும் பொருட்டுத் தமிழ்நாட்டில் தங்கியிருந்த சமண முனிவர்களுடைய மாணவர்களாகிய சைனப் புலவர் சிலர் பொது நீதிகளோடு தம் சமயத்திற்குரிய சிறப்பு நீதிகளையும் சேர்த்து, சில நீதி நூல்கள் இயற்றியுள்ளனர். அவை முன்னுறையரையரது பழமொழியும், காரியாசானது சிறுபஞ்சமூலமும், கனிமேதாவியாரது ஏலாதியும் ஆகும். அகப்பொருளிலக் கணத்திற்கு இலக்கியங்களாயுள்ள மதுரைக் கண்ணங்கூத்தனாரது கார்நாற்பதும், மாறன் பொறையனாரது ஐந்திணை ஐம்பதும், கண்ணன் சேந்தனாரது திணைமொழி ஐம்பதும், மூவாதியாரது ஐந்திணை எழுபதும், கணிமேதாவியாரது திணைமாலை நூற்றைம்பதும், புல்லங்காடனாரது கைந்நிலையும் இக்காலப் பகுதியில் தோன்றியனவேயாம். இவற்றுள் சில, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பூஜ்யபாதருடைய மாணாக்கர் வச்சிர நந்தி என்ற சமண முனிவர் மதுரை மாநகரில் நிறுவிய. தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த புலவர்களால் இயற்றப்பெற்றிருத்தலும் கூடும். இனி, காரைக்காலம்மையார் நூல்களும், திருமூல நாயனாரது திருமந்திரமும், முத்தொள்ளாயிரம் என்ற நூலும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலாதல் ஆறாம் நூற்றாண்டிலாதல் இயற்றப் பட்டிருத்தல் வேண்டும். இவற்றுள் முத்தொள்ளாயிரத்தில் இப்போது கிடைத்துள்ள பாடல்கள் நூற்றொன்பதாகும். எனவே, அஃது இறந்து போன தொன்னூல்களுள் ஒன்று என்பது தேற்றம்.