பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- - 155 - பல்லவ பாண்டியர் காலம் இது, தமிழ் நாட்டின் வடபகுதியில் பல்லவர் பேரரசும், தென்பகுதியில் பாண்டியருடைய முதற் பேரரசும் நடைபெற்ற காலமாகும். இக்காலப் பகுதி கி.பி. 600 முதல் கி.பி. 900 வரையில் அமைந்தது எனலாம். இந்நூற்றாண்டுகளில் சமயகுரவர்கள் தோன்றி ஊர்தோறும் சென்று, இறைவன்மீது திருப்பதிகங்கள் பாடியருளிப் பத்திநெறியை யாண்டும் பரப்பிவந்தமை குறப்பிடத்தக்க நிகழ்ச்சி யாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முதல் இடைப்பகுதிகளில் திருநாவுக்கரசரும், அந்நூற்றாண்டின் இடைப்பகுதியில் திருஞான சம்பந்தரும், அந்நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் சுந்தரமூர்த்திகளும் திகழ்ந்தவர்கள் ஆவர். அப்பெருமக்கள் மூவரும் பாடியருளிய திருப்பதிகங்கள் தேவாரப் பதிகங்கள் என வழங்கப்பெறும். அவை, சைவத் திருமுறைகள் பன்னிரண்டுள் முதல் ஏழு திருமுறைகளில் அடங்கி யிருத்தல் அறியத் தக்கது. திருக்கயிலாய ஞானஉலா பொன்வண்ணத் தந்தாதி முதலியவற்றைப் பாடிய சேரமான் பெருமாளும் இக்காலத்தவரே. இனி, வைணவசமய குரவராகிய பொய்கையார், பூதத்தார், பேயார், திருமழிசையாழ்வார் என்போர் நிலவிய காலமும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாம். - கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார் ஆகிய வைணவ சமயப் பெரியார் இருந்துள்ளனர். அவர்கள் பாடிய நூல்களும் பதிகங்களும் நாலாயிரப் பிரபந்தத்தில் உள்ளன. திருவாசகமும் திருக்கோவையாரும். இயற்றி யருளிய மாணிக்கவாசகர் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்தமை உணரற்பாலது. அவ்வடிகளின் நூல்கள் இரண்டும் எட்டாந் திருமுறையாக உள்ளன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் நம்மாழ்வாரது திருவாய்மொழிப் பிரபந்தம், பட்டினத்தடிகளின் பிரபந்தங்கள், பாரதவெண்பா , நந்திக்கலம்பகம், ஔவையாருடைய நீதி நூல்கள் ஆகியவை இயற்றப்பெற்றன. அவற்றுள், திருவாய்மொழி நாலாயிரப் பிரபந்தத்தில் உளது; பட்டினத்தடிகளின் பிரபந்தங்கள் பதினோராந் திருமுறையில் தொகுக்கப் பட்டிருக்கின்றன; நந்திக்கலம்பகம், தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்ற பல்லவவேந்தன் மீது பாடப்பெற்ற நூலாகும். அதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை . இப்போது தமிழிலுள்ள கலம்பக நூல்களுள் அதுவே பழமை வாய்ந்தது. அப்பல்லவ அரசன் ஆதரவினால் தோன்றிய பாரத வெண்பாவின் ஆசிரியர் யாவர் என்பதும் 11