- 160 34. ஒட்டக்கூத்தர் (12ஆம் நூற்றாண்டு). காகம் கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தருடைய இயற்பெயர் கூத்தர் என்பது. இது நடராசப் பெருமானுடைய பெயர். இப்புலவர் பிறந்தது மலரி என்னும் ஊர். இவ்வூர் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் இக்காலத்தில் திருவரம்பூர் என்று வழங்கிவரும் திரு எறும்பியூரே என்பது அங்குள்ள கோயிற் கல்வெட்டால் உறுதி எய்துகின்றது. இவர் செங்குந்த மரபினர் என்பது மட்டும் தெரிகிறது. இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த புலமை பெற்றிருந்ததோடு வடமொழி நூல்களையும் நன்கு பயின்றிருந் தாரென்று தெரிகிறது. அன்றியும் இவர் செய்யுள் இயற்றும் ஆற்றல் மிக்கவர் என்பதும், சிவபக்தி உடையவர் என்பதும், கலைமகளிடத்தும் திருஞானசம்பந்த மூர்த்தியிடத்தும் அன்பு வாய்ந்தவர் என்பதும் இவர் இயற்றியுள்ள நூல்களால் விளங்கும். இவர் முதற்குலோத்துங்க சோழனுடைய புதல்வன் விக்கிரம சோழனுக்கு அவைக்களப் புலவராகவும், அவன் மகன் இரண்டாங் குலோத்துங்க சோழனுக்கும் அவன் புதல்வன் இரண்டாம் இராசராச சோழனுக்கும் தமிழாசிரியராகவும் அவைக்களப்புலவராகவும் விளங்கிப் பெருவாழ்வு பெற்று நெடுங்காலம் இருந்தவர் என்று தெரிகிறது. அவர்களுள் விக்கிரம சோழன் (ஆ.கா.1118-1133) மீது உலா ஒன்றும், கலிங்கப்பரணி என்ற நூல் ஒன்றும் இவர் பாடியுள்ளார். அவற்றுள், கலிங்கப் பரணி இந்நாளில் கிடைக்காமையின் இறந்தது போலும். விக்கிரம சோழனுலாவிலுள்ள ஒரு கண்ணியை ஒட்டி ஒரு செய்யுள் பாடும்படி வேந்தன் கூற, அவ்வாறே விரைந்து பாடியமைபற்றி இப்புலவர் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பெற்றனர் எனக் கூறுவர். இப்பெயருக்கு வேறு காரணம் கூறுவாரும் உண்டு. விக்கிரம சோழன் இவருக்கு யானை, காளம் முதலிய வரிசைகள் அளித்துப் பாராட்டிய போது, இவர் அவற்றைப் பெறுவதற்குத் தமக்குத் தகுதி இல்லை என்றுரைத்துத் தம் பணிவுடைமையத் தெரிவித்தனர். இப்புலவர் இரண்டாங் குலோத்துங்க சோழன் (ஆ.கா.1133-1150) மீது தாம் கொண்ட அன்பினால் பிள்ளைத் தமிழ் ஒன்றும், உலா ஒன்றும், பாடியிருப்பதோடு அவனுக்குத் தமிழாசிரியராக அமர்ந்து, அவனைச் செந்தமிழ்ப் புலமை வாய்ந்த வேந்தனாக ஆக்கியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் அம்மன்னனது பேராதரவிற்குரியவராகிச் செல்வம், புகழ், மதிப்பு ஆகியவற்றை மிகுதியாகப் பெற்று, எத்தகைய கவலையுமின்றி இனிது வாழ்ந்துவந்தனர் எனலாம். ஒருமுறை அவ்வரசர் பெருமான், 'நித்தநவம் பாடுங் கலிப்பெரு மானொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்-சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெனைச் சொல்லுவரே' என்று தன் ஆசிரியராகிய இக்கவிஞர் கோமானைப்