பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



164 - தக்கயாகப்பரணி தக்கன் சிவபெருமானை அவமதித்துச் செய்த யாகத்தை வீரபத்திரக் கடவுள் அழித்து, அவனையும் அவனுக்கு உதவிபுரிந்த தேவர்களையும் வென்ற வரலாற்றைப் பொருளாகக் கொண்டு இயற்றிய பரணி நூலாகும். இவர், இதன் இறுதி உறுப்பாகிய வாழ்த்து என்ற பகுதியில் இரண்டாம் இராசராச சோழனைத் தனியே வாழ்த்தியும், அவ்வேந்தனுடைய வீரச்செயல் முதலானவற்றை உவமை முகத்தாலும் வேறுவகையாலும் இந்நூலில் ஆங்காங்குப் பாராட்டியுமிருக்கிறார். ஒட்டக்கூத்தர் தம் வாழ்நாளில் இயற்றிய நூல்களில் இதுவே இறுதி நூலாக இருத்தலுங்கூடும். இது 814 தாழிசைகளையுடையது. இதற்குச் சிறந்த பழைய உரை ஒன்றுள்ளது. அவ்வுரையும் இவருடைய மாணவர் ஒருவர் எழுதியதாதல் வேண்டும் என்பதற்கு அதில் சான்றுகள் காணப்படுகின்றன. - காங்கேயன் நாலாயிரக் கோவை தம்மை இளமையில் வளர்த்து ஆதரித்த காங்கேயன்மீது ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல் என்பது சோழமண்டல சதகத்தால் அறியப்படுகிறது. இக்காலத்தில் இந்நூல் கிடைக்காமையால் இதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. - இவையேயன்றி, ஈட்டியெழுபது என்னும் நூலையும் ஒட்டக்கூத்தர் பாடியதாகக் கூறிவருகின்றனர். ஆனால் அந்நூலைப் படித்துப் பார்க்குமிடத்து, அது கூத்தர் வாக்காகத் தோன்றவில்லை.