பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



179 - 'இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினு மென்றும் அடங்காதா ரென்று மடங்கார் - தடங்கண்ணாய் உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும் கைப்பறா பேய்ச் சுரையின் காய்' என்னும் நாலடியாரில் வந்துள்ள காயம் என்ற சொல் இனிய சுவையைத் தரும் பொருள்களையே உணர்த்துதல் காண்க. இப்பாடலுக்கு உரை எழுதியவர்கள், 'பேய்ச்சுரைக்காய்கள் உப்பும் நெய்யும் பாலும் தயிரும் காயமும் போட்டுச் சமைத்தாலும் கசப்பு நீங்காதனவாம்', என்று வரைந்திருத்தலால் அன்னோர் காயம் என்பதின் பொருளை விளக்கிக் கூறினாரில்லை. ஒருகால், அதனை அவர்கள் பெருங்காயம் என்று கருதிப்பொருள் கூறாமல் விட்டிருத்தலுங்கூடும்; ஆனால், ஆசிரியர் பரிமேலழகர் அங்ஙனம் கருதவில்லை என்பது காயங்கள் என்று பன்மையில் கூறியிருத்தலால் பெறப்படுகின்றது. நாலடியார் எழுதப்பெற்ற காலத்தில் இந்நாளிலுள்ள பெருங்காயம் இல்லை என்பது திண்ணம். ஆகவே, நாலடியாரின் ஆசிரியரும் பரிமேலழகரும் கொண்ட பொருள் யாது என்பது ஈண்டு ஆராய்தற்குரியதாகும். இனி; திருநெல்வேலி ஜில்லாவில் திருச்செந்தூரிலுள்ள ஒரு கல்வெட்டு, காயம் என்பதின் பொருளை மிகத்தெளிவாக உணர்த்துகின்றது, அஃது அடியில் வருமாறு: (41)... 'காயம் மிளகமுது (42) மஞ்சளமுது சீரகவமுது சிறுகடுகமுது (43) கொத்தமலி அமுது ஏற்றிக் காயம் ஐந்து இவை ஒருபோதைக்கு முச்செவிடாக நான்கு போதைக்குக் காயம் உழக்கே இருசெவிடு' (Tiruchendur Inscription of Varaguna Maharaja Il; Epigraphia Indica Vol XXI No. 17.) இக்கல்வெட்டினால் காயங்கள் ஐந்துள்ளன என்பதும் அவை மிளகும் சீரகமும் மஞ்சளும் சிறுகடுகும் கொத்தமல்லியுமாம் என்பதும் நன்கு புலப்படுகின்றன. 'காய மிளகமுது' எனவும் 'காயம் ஐந்து' எனவும் இக்கல்வெட்டில் வந்துள்ளமையால் இவ்வைந்தனுள் ஒவ்வொன்றையும் காயம் என்று முற்காலத்தார் வழங்கி வந்தனர் என்பது தெள்ளிதின் உணரப்படும். எனவே, நாலடியாரின் ஆசிரியரும் பரிமேலழகரும் காயம் என்பதற்குக் கொண்டபொருள் மேலே குறித்துள்ள கல்வெட்டினால் விளக்கமுறுதல் காண்க. 8. சாத்தனூரும் திருவாவடுதுறையும்:- சோழமண்டலத்தில் சாத்தனூர் என்ற ஊர் ஒன்றுளது. இதுவே அறுபத்து மூன்று அடியார்களுள் ஒருவராகிய திருமூல நாயனார் வாழ்ந்த தலமாகும். இதற்கு அண்மையில் திருவாவடுதுறை என்ற தலம் உளது. இது