பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



23 HA அதிகமானைப் போரிற்புறங்கண்டு அவன் கவர்ந்துள்ள நாட்டைத் திரும்பக் கைப்பற்றி அதனைக் காரிக்கு அளிப்பதாக உறுதிகூறினன்; அன்றியும் அதிகமானோடு போர் தொடங்குமுன்னர் அவனது தாயத்தானாகிய ஓரியோடு பொருது அவனது கொல்லிக் கூற்றத்தைக் கைப்பற்றிக்கொள்வது இன்றியமையாததென்று அச்சேரமான் கருதினான். அதனை யறிந்த திருமுடிக்காரி சேரமானது படையுடன் வஞ்சி சூடி ஓரியினது கொல்லிமலைக்குச் சென்றனன். காரிக்கும் ஓரிக்கும் கொல்லிமலையின் பக்கலில் பெரும்போர் நடைபெற்றது. இரவலர்கட்கு இனியனாய் அன்னார் வேண்டிய வேண்டியாங்கு அளிந்து வந்த பெருங்கொடைவள்ளலாகிய ஓரி, அப்போரில் இம்மண்ணுலகை நீத்து ஈவாருங் கொள்வாருமில்லாத வானுலகம் எய்தினான். இச்செய்தி, 'குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த காரிக் குதிரைக் காரியொடு மலைந்த ஓரிக் குதிரை யோரியும்' என்ற சிறுபாணாற்றுப்படையடிகலானும், ‘ஓரிக் கொன்ற வொருபெருந் தெருவிற் காரி புக்க நேரார் புலம்போற் கல்லென் றன்றா லூரோ' என்ற நற்றிணைப் பாடலானும், 'முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி செல்லா நல்லிசை நிறுத்த வல்வில் லோரிக் கொன்று சேரலற் கீத்த செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி' என்ற அகப்பாட்டானும் இனிது அறியப்படுகின்றது. போரில் வாகைமிலைந்த திருமுடிக்காரி மிக்க ஆரவாரத்தோடு ஓரியினது நகரத்துட்புகுந்து அதனையும் கொல்லிக் கூற்றத்தையும் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அவன், அந்நாட்டைச் சேரமானுக்கு அளித்து விட்டமையின், அது பெருஞ்சேரலிரும்பொறைக்கு உரியதாயிற்று. செந்தமிழ்ப் புலவர்களும் கொல்லிமலையைப் பொறையன் கொல்லியென்றே வழங்குவாராயினர், இதனை, 'இரவலர் மெலியா தேறும் பொறையன் உரைசா லுயர்வரைக் கொல்லிக் குடவயின்' (நற்றிணை 185) எனவும்,