பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



33 | 8. மழவர் வரலாறு பண்டைக்காலத்தில் நம் தமிழகத்தின் ஒரு பகுதியை மழவர் என்ற ஒரு குலத்தினர் ஆட்சிபுரிந்துள்ளனரென்பதும், இன்னோர் பெருவீரர்களாயிருந்தமையின் அந்நாளில் தமிழகத்தில் ஆட்சிபுரிந்துவந்த முடியுடை வேந்தர்களாகிய சேரசோழ பாண்டியர்கட்கு உற்றுழியுதவி வந்துள்ளனரென்பதும் அகநானூறு' புறநானூறு பதிற்றுப்பத்து முதலான சங்க நூற்களை - ஆராய்வார்க்கு இனிது புலப்படும். கடையெழுவள்ளல்களிற் சிலர் இக்குலத்தைச் சேர்ந்தவராவர். வரையாமலீயும் வள்ளல்களாய் முற்காலத்தே பெரும்புகழ் படைத்து நிலவிய அதியமான், நெடுமான், அஞ்சி, ஓரி முதலானோர் தோன்றியது இம்மழவர் குலமெனின் இதற்கு வேறு சிறப்பும் வேண்டுமோ? இத்தகைய பெருமை வாய்ந்த மழவர் குலத்தின் வரலாறு நாம் அறிந்து கொள்ளுதற்குரியதொன்றாகலின் அதனைப் பண்டைத் தமிழ் நூற்களின் துணைகொண்டு ஆராய்ந்து அறிய முயல்வோம். இனி, இம்மழவர் என்பார் யாவர்? இவர்கள் எவ்வகுப்பைச் சேர்ந்தவர்கள்? இவர்களது பழைய நாடு யாது? இன்னோர் தமிழகத்தின் பழைய மக்களா? அன்றி அங்கு இடையிற் குடியேறியவர்களா? மற்றும் இவர்களைப் பற்றிச் சிறப்பாக அறிந்துகொள்ளக்கூடியன யாவை? இவர்களது வழியினராக இப்போது நம் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றவர் யாவர்? என்பவற்றை ஆராய்வாம். மிகப்பழைய காலத்தில் நம் தமிழகத்தின் தென்பகுதியைக் கடல் கொண்டபோது அழிந்தொழிந்த தமிழ் நூற்கள் எத்துணையோ பலவாம். * அவையொழிய எஞ்சியுள்ள தமிழ் நூற்களில் மிகப்பழமையானது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலேயாகும். இந்நூல் அகத்திய முனிவரது மாணாக்கரும், இடைச்சங்கப்புலவருள் ஒருவருமாகிய ஆசிரியர் தொல்காப்பியனாரால் இயற்றப்பெற்றது; நிலந்தருதிருவிற் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேற்றப்பெற்றது இடைச்சங்கத்தார்க்கும், கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலாக அமையப்பெற்றது. இத்தகைய அருமை வாய்ந்த பழைய நூலில் முற்காலத்தில் தமிழ் மக்களுள் காணப்பட்ட குல வேறுபாடுகள் இனிது கூறப்பட்டுள்ளன. அதனை யாராயுங்கால், பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வகுப்பினரும் பழைய நாளில் நம் தமிழகத்தில் 1.அகநானூறு 1, 35, 91, 101, 119, 121, 127, 129, 131, 187, 251, 269, 309, 337. 2 புறநானூறு. 90 3 பதிற்றுப்பத்து 21, 55, 60- பதிகம். * ஏரணம் உருவம் போகம் இசைகணக் கிரதஞ் சாலம் தாரண மரமே சந்தந் தம்பநீர்நிலம் உலோகம் ஆரணம் பொருளென் றின்ன மானநூல் பலவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள.