சோழச்சம்புவராயன் பெரிதும் வருந்திக் காஞ்சிபுரத்திற்கருகிலுள்ள ஆரப்பாக்கத்தில் எழுந்தருளியிருந்த உமாபதி தேவராகிய ஞானசிவ தேவரிடம் சென்று இச்செய்திகளை விண்ணப்பித்துச் 'சிங்களப்படை நம் சோழநாட்டிற் புகுந்தால் பல ஆலயங்கள் அழிக்கப்பட்டுவிடுமே; அந்தணர் துன்புறுவரே; ஆதலால் அச்சிங்களப்படை தோற்றோடுமாறு தாங்கள் எவையேனும் உபாயங்கள் செய்தருளவேண்டும்' என்று கூறினன். இதனைக்கேட்ட அப்பெரியார் 'அன்னோர் இராமேச்சுரம் கோயில் வாயிலை இடித்துச் சிவபெருமானுக்கு நித்திய பூசை நடைபெறாதவாறு இடையூறு புரிந்தனர் என்று கேள்வியுற்றேன்; எனவே அவர்கள் சிவாபராதம் செய்தவர் ஆவர். ஆகவே, அவர்கள் போரில் தோல்வியெய்தி ஓடுமாறு தக்கவழி தேடுவேன்' என்றுரைத்து இருபத்தெட்டு நாட்கள் இரவும்பகலும் தவம்புரிந்தனர். அப்போது திருச்சிற்றம்பலமுடையான் பிள்ளைப் பல்லவராயனிடமிருந்து 'இலங்காபுரித் தண்டநாயகனும் சகத்விசயதண்டநாயகனும் தோல்வியுற்று இலங்கைக்கு ஓடிப்போயினர்' என்று எதிலிலி சோழச்சம்புவராயனுக்கு ஒரு திருமுகம் வந்தது. இதனைக் கண்ட இச்சம்புவராயன் பெரிதும் மகிழ்ந்து ஆரப்பாக்கத்திலிருந்த சுவாமிகளிடம் கொண்டுபோய்க் காட்டவே, அவரும் உவகையுற்றனர். பின்னர் இவ்வேந்தன் ஆரப்பாக்கம் என்னும் கிராமத்தை அப்பெரியாருக்கு அளித்தனர். இச்செய்திகளை ஆரப்பாக்கத்திலுள்ள கல்வெட்டுக்களில் விளக்கமாய்க் காணலாம். (Ins. 20 of 1899) இவ்வேந்தன் மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தும் அவனது சிற்றரசர்களுள் ஒருவனாயிருந்தனன். விரிஞ்சிபுரத்திற் கருகிலுள்ளதும் பொய்கை என்று தற்காலத்தில் அழைக்கப்படுவதுமாகிய இராஜேந்திர சோழநல்லூர் சித்திரமேழிமலை மண்டல விண்ணகரான அருளாளப்பெருமாளுக்குக் குமாரமங்கலம், புத்தூர், அத்தியூர் ஆகிய கிராமங்களைக் கி.பி. 1238, 1239, 1243ஆம் ஆண்டுகளில் மலைமண்டலத்து வணிகன் இராமகேரளச் செட்டியிடம் இம்மன்னன் பொன் பெற்றுக்கொண்டு தேவதானமாகவிட்டான் என்று பொய்கையிலுள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. (S.I.I Voi. Nos. 59,61, 62 and 64). அத்திமல்லன் சம்புகுலப் பெருமாளான இராஜகம்பீரச் சம்புவராயன் என்பானும் மூன்றாம் இராஜராஜசோழனது ஆட்சியின் 20-ம் ஆண்டாகிய கி.பி. 1236-ல் ஆட்சிபுரிந்துகொண்டிருந்தான் என்று தெரிகிறது. இவன் எதிரிலி சோழச்சம்புவராயனது தம்பியாயிருத்தல் வேண்டுமென்று ஊகிக்கப்படுகிறது. இவ்விருவேந்தரும் ஒரேகாலத்தில் ஆட்சிபுரிந்து வந்துள்ளார் என்பது பல கல்வெட்டுக்களால் நன்கறியக்கிடக்கின்றது. நமது இராஜகம்பீரச் சம்புவராயன் குன்றத்தூரை இராஜகம்பீரநல்லூர் என்னும் பெயருடன் நிலவுமாறு பங்களராயர்க்குக் காணியாகக் கி.பி. 1236-ல் அளித்தான். இச்செய்தியை