பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



45 உணர்த்தும் கல்வெட்டொன்று வைகவூர்த் திருமலையிற் காணப்படுகின்றது. அதனை அடியில் குறிக்கின்றேன். ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீஇராஜராஜதேவருக்கு - யாண்டு இருபதாவது முதல் ஐயங்கொண்டசோழமண்டலத்துத் தமனூர் நாட்டு விரன்பாக்கத்து இலாலப்பெருமான் மகன் ஆண்டான்கள் பங்களராயர்க்குப் பல் குன்றக் கோட்டத்துப் பங்களநாட்டு நடுவில்...க்குன்றத்தூரான ராஜகம்பீரநல்லூர் இவர்க்குக் காணியாகக் கீழ்நோக்கின கிணறும் மேனோக்கின மரமும் நாற்பாலெல்லையும் விற்றொற்றிப் பரிக்கிரயத்துக்கு உரித்தாவதாகக் கொடுத்தோம். அத்திமல்லன் சம்புகுலப்பெருமாளான ராஜகம்பீரச் சம்புவராயனேன். (S.I.I. VOI.I No.74) இக்கல்வெட்டால் இராஜகம்பீரச் சம்புவராயன் மூன்றாம் இராஜராஜசோழ்னது ஆட்சிக்குட்பட்டிருந்த ஒரு குறுநில மன்னன் என்பதும், 'சம்புகுலப்பெருமாள்' என்னும் சிறப்புச் பெயர் பெற்றவன் என்பதும் நன்கு விளங்குகின்றன. இராஜகம்பீரச் சதுர்வேதி மங்கலம் எனவும், சம்புகுலப்பெருமான் அகரம் எனவும் அழைக்கப்படும் ஊர்கள் இம்மன்னன் பெயரால் அழைக்கப்பெற்ற ஊர்கள் போலும். இராஜகம்பீர நல்லூரும் இராஜகம்பீரச் சதுர்வேதிமங்கலமும் வேறு ஊர்களாதல் உணர்க. இனிச் சம்புவராய மன்னர்களுள் இராஜகம்பீரச் சம்புவராயனே மிகவும் பெருமையுற்றவன். இவ்வேந்தன் காலத்தில் இவனது இராச்சியம் பெருகியதோடு 'இராஜகம்பீரவிராஜ்ஜியம்' என்னும் பெயரையும் எய்தியது. இவன் படைவீட்டில் ஒரு மலைக்கோட்டையமைத்து அதனைத் தனக்கு உறைவிடமாகவுஞ் செய்துகொண்டான். கி.பி. 1258-ல் படைவீட்டில் வெட்டப்பெற்றுள்ள ஒரு கல்வெட்டு இவன் சோழர்களுக்குக் கப்பஞ் செலுத்தாமல் தனி அரசுபுரிந்தான் என்று கூறுகின்றது. இதனால் இவன் காலத்தேதான் சம்புவராயர்கள் நெடுமுடி வேந்தராய் ஆட்சிபுரியும் பெருமையை அடைந்தனர் என்பது நன்கு வெளியாகின்றது. இவர்களது இராச்சியமும் தொண்டைமண்டலத்துப் படை வீட்டிராஜ்யம்' என்று புகழப்படும் சிறப்பையம் அடைந்தது. படைவீட்டினுள் அம்மையப்பேச்சுரர் ஆலயம் எடுப்பித்து அதற்கு நிபந்தங்கள் விட்டவனும் இவ்வேந்தனேயாவன். இவனது தந்தையாகிய அம்மையப்பன் கண்ணுடைய பெருமானான விக்கிரம சோழச் சம்புவராயனது பெயரே இவ்வாலயத்திற்கு இடப்பட்டது போலும். சோழமன்னர்களது ஆட்சிக்காலங்களில் எடுப்பிக்கப்பெற்ற இராஜராஜேச்சுரம், கங்கைகொண்ட சோழேச்சுரம், விக்கிரமசோழேச்சுரம் என்ற ஆலயங்கள் எய்தியுள்ள பெயர்களையும் ஆராய்ந்து நோக்குங்கால் இவ்வுண்மை நன்கு புலப்படும்.