பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- 46 இனி இவனுக்குப் பின்னர் அரசுரிமை எய்தியவன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. ஆனால் இவனுக்குப் பின்னர்ப் பட்டம் பெற்றவன் தனது சுயேச்சையை இழந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதற்கேற்ப, காஞ்சிபுரத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள சில இடங்களிலும் தெலுங்குநாட்டுச் சோழர்களது - கல்வெட்டுக்களும் சேந்தமங்கலத்துப் பல்லவனாகிய கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுக் களும் அக்காலத்தில் காணப்படுகின்றன. எனவே, சம்புவராயர்களும் சிலகாலம் இவர்களுக்குத்திறை செலுத்தும் நிலையிலிருந்தனரோ என்று ஐயுறவேண்டியிருக்கின்றது. ஆயினும் கி.பி. 1314-15-ல், வீரசோழச் சம்புவராயன், வீரசம்புவராயன் என்போரது கல்வெட்டுக்கள் சில இடங்களில் காணப்படுகின்றன. இன்னோர் சுயேச்சையுற்று வாழ்ந்து வந்தனர் என்று தெரிகிறது. அன்றியும் கி.பி. 1322- ல் சகலலோகசக்கிரவர்த்தி வென்று மண்கொண்ட சம்புவராயன் பட்டம் சூட்டப்பெற்று அரசாளத்தொடங்கினான். இவன் சக்கிரவர்த்தி என்ற பட்டம் பெற்றிருத்தலாலும் 'வென்றுமண்கொண்ட' என்ற அடைமொழி களோடு விளங்குதலாலும் இவனே தெலுங்கு நாட்டுச் சோழர் முதலானோரைப் போரில் வென்று மீண்டும் சுயேச்சையுற்றுத் தனியரசு புரிந்தவனாதல் வேண்டும் என்பது நன்கு புலப்படுதல் காண்க. இவன் கி.பி. 1338 வரை ஆட்சிபுரிந்தான். இவன் காலத்தில் படைவீட்டு ராஜ்யம் மகோன்னத நிலையிலிருந்து இவனுக்குப் பிறவேந்தரெல்லாம் அஞ்சுவராயினர். விஜயநகர வேந்தர்களும் தமக்குத் தெற்கிலுள்ள சம்புவராயர்களைக் கண்டு அஞ்சி அவர்களை எவ்வாறாயினும் தம் சிற்றரசர்களாக்கித் திறை செலுத்தச் செய்ய வேண்டுமென்று காலங்கருதிக் கொண்டிருந்தனர். இன்னோரது முயற்சி வென்றுமண்கொண்ட சம்புவராயன் என்பானது ஆட்சியுள்ள வரையில் பயன்படவில்லை . கி.பி. 1338-ல் அவ்வேந்தன் விண்ணுல கெய்தவே அவனது புதல்வன் இராஜநாராயண சம்புவராயன் முடிசூட்டப்பட்டான். இவன் நாட்டாட்சியை எய்திய பின்னர்ச் சகலலோக சக்கிரவர்த்தி ராஜநாராயண சம்புவராயன் என்று அழைக்கப்பெற்றான். இவன் கி.பி. 1339 முதல் 1366 வரை ஆட்சி புரிந்தான். இவனது கல்வெட்டுக்கள் காஞ்சி, மாமல்லபுரம், படைவீடு, வேலூர், திருப்புக்கொளி, போளூர்த்திருமலை முதலான இடங்களில் காணப்படுகின்றன. இவனும் தனது முன்னோர்கள் போலவே பல கோயில்களுக்கு - நிபந்தங்கள் விட்டிருக்கின்றான். இவனது ஆட்சிக்காலத்தில்தான் விஜய நகர வேந்தனாகிய குமாரகம் பண்ணன் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்தனன். இது கி.பி. 1365-க்கு முன்னர் நிகழ்ந்தது. பெரும்படையுடன் தென்னாடு போந்த விஜயநகர வேந்தன் முதலில் படைவீட்டிராஜ்ஜியம் எனப்படும் இராஜகம்பீர விராஜ்ஜியத்தைத் தாக்கினான். தாக்கவே இராஜ நாராயண சம்புவராயனும் தன் பகைவனை எதிர்த்துப் போர்புரிந்தான். இறுதியில்