பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



47 விஜயநகர வேந்தன் வெற்றியடைந்தமையின் சம்புவராயன் தன் நாட்டை இழந்தான். ஆயினும் குமாரகம்பண்ணன் தான் கைப் பற்றிய `நாட்டைத் திரும்ப அச்சம்புவராய மன்னனுக்கே யளித்து அவனைத் தனக்கு ஆண்டு தோறும் திறை செலுத்தி வருமாறு கட்டளையிட்டுவிட்டுப் பாண்டி நாடு நோக்கிச்சென்றான். பிறகு கி.பி.1366-ல் இராஜநாராயண சம்புவராயனும் இறந்தான். அவன் வழியில் தோன்றிய சம்புவராயர்களும் குறுநில மன்னராகி விஜய நகரத்தரசர்களுக்குக் கப்பஞ் செலுத்திவந்தனர். அன்னோர் பல ஆண்டுகள் அந்நிலையிலேயே இருந்துவந்தனர். பின்னர் அவர்களது ஆட்சியும் ஒழிந்தது. ஒழியவே அவர்களும் செல்வங்குன்றியவர்களாய்த் தாழ்ந்தநிலையை எய்தினர். வடஆற்காடு ஜில்லாவில் வேலூருக்கண்மையிலுள்ள படைவீடு என்ற இடத்தில் இன்றும் அவர்களது வழியினர் வசிக்கின்றனர். படைவீடு என்னும் அவர்களது தலைமை நகரம் இப்போது 'படவேடு ' என்றழைக்கப்படுகிறது. அங்கு அழிந்து கிடக்கும் அரண்களையும் கோட்டையையும் அம்மையப்பேச்சுரர் ஆலயத்தையும் இன்றும் காணலாம். இனி, இரட்டைப்புலவர்களால் பாடப்பெற்ற கலம்பகம் கொண்டவனும் காஞ்சியைத் தலைமை நகராகக்கொண்டு அதனைச் சூழ்ந்துள்ள பகுதியை அரசாண்டவனும் காஞ்சியில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதருக்கு அரிய பெரிய திருப்பணிகள் பல புரிந்தவனுமாகிய ஏகாம்பரச்சம்புவராயன் என்பானும் அச்சம்புவராய மன்னர்களின் வழித்தோன்றல்களுள் ஒருவன் என்பது ஈண்டு அறிந்து கோடற் குரியதாகும்.