இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
68 பெயருடன் ஒன்றாக்கி, வேதங்களிலும் சாத்திரங்களிலும் வல்ல அந்தணர் பலர்க்குப் பிரமதேயமாக வழங்கிய நிகழ்ச்சியைத் தெரிவிப்பதாகும். இதில் அவ்வூர்களின் பெயர்களும், நான்கெல்லைகளும், விளை நிலங்களின் கணக்கும், அவற்றிலிருந்து வருவாயாக ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய நெல்லுங் காசும், அவற்றைப் பெறுதற்குரிய அந்தணர்களின் ஊர்களும் பெயர்களும் பங்குகளும், விளக்கமாக வரையப்பட்டுள்ளன. அவ்வூர்களிலிருந்து ஆண்டுதோறும் அன்னோர் பெறும் நெல் ஐம்பத்தோராயிரத்தைம்பது கலமும் காசு முப்பத்திரண்டரையுமாகும் என்பது இதனால் நன்கறியக்கிடக்கின்றது. பேரும் புகழும் படைத்துத் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கிய முதல் இராசேந்திரசோழன், இவ்வறத்தைத் தன் தாயாகிய திரிபுவனமாதேவியின் பெயரால் செய்துள்ளமை, இப்பெரு வேந்தன் தன் தாயிடத்தில் கொண்டிருந்த பேரன்பினை இனிது புலப்படுத்துவதாகும்.