பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



69 15. பழைய காலத்திய இருபெருங் கிணறுகள் 1. மாற்பிடுகு இருபெருங் கிணறுகள் மாற்பிடுகு பெருங்கிணறு என்பது திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே பன்னிரண்டு மைல் தூரத்திலுள்ள திருவெள்ளறைப் புண்டரீகாட்சப்பெருமாள் கோயிலின் தென்பக்கத்திலுள்ளது. இங்குக் குறிக்கப்பெற்ற திருமால் கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்றதாகும். அன்றியும், இவ்வூரில் சிவாலயம் ஒன்று உளது. இது மலையிற் குடைந்ததொருகோயில் என்பது பார்ப்போர்க்கு இனிது புலப்படும். தற்காலத்தில் இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமானைச் சம்புநாதர் என்று வழங்குகின்றனர்; ஆனால் இதிற் காணப்படும் கல்வெட்டுக்கள் திருவானைக்கல் பெருமான் அடிகள் என்றே உணர்த்துகின்றன. இவ்விருகோயில்களிலும் சோழ மன்னர்களது கல்வெட்டுக்கள் பல உள்ளன. அவற்றுள் இரண்டு கல்வெட்டுக்கள் ஒரு கிணற்றின் மேற்பக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்று, கிணற்றை வெட்டுவித்தவன் யாவன் என்பதையும் அதற்கு இடப்பெற்ற பெயர் யாது என்பதையும் கிணறு வெட்டப்பெற்ற காலத்தையும் அறிவிக்கின்றது. மற்றொரு கல்வெட்டு அறுசீர் விருத்தமாக உள்ளது. கல்வெட்டுக்கள் இரண்டையும் அடியிற் காண்க : 1. (1) ஸ்வஸ்திஸ்ரீ பாரத்வாஜ கோத்திரத்தின் வழித்தோன்றிய பல்லவ திலத குலோத்பவன் தந்திவர்மற்கு யாண்டு நான்காவதெடுத்துக் கொண்டு ஐந்தாவது முற்றுவித்தான் ஆலம் பாக்க விசைய நல்லூழான் (2) தம்பி கம்பன் அரையன் திருவெள்ளறைத் தென்னூர்க் பெருங் கிணறு இதன் பெயர் மாற்பிடுகு பெருங்கிணறென்பது - இது ரட்சிப்பார் இவ்வூர் மூவாயிரத்தெழுநூற்றுவரும்: 2. (1) கண்டார் காணா வுலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நையாதேய் (2) தண்டார் மூப்பு வந்துன்னைத் தளரச் செய்து நில்லாமுன் உண்டேலுண்டு மிக்கது உலகம் மறிய வைம்மினேய். * இவற்றுள் முதலாவது கல்வெட்டு பல உண்மைச்செய்திகளை யுணர்த்துகின்றது. பல்லவ குலத்தினர் பாரத்துவாச கோத்திரத்தினர் என்பதையும் அப்பல்லவ குலத்தில் தந்திவர்மன் என்னும் வேந்தன் ஒருவன் இருந்தான் என்பதையும் திருவெள்ளறைத் தென்னூர்ப் பெருங்கிணறு அவ்வேந்தனது ஆட்சியில் நான்காம் ஆண்டில் தோண்டத் தொடங்கப்பெற்று ஐந்தாம் ஆண்டில் அவ்வேலை முடிவுற்றது * இப்பாடலில் ஏகார நெட்டெழுத்திற்குப் பிறகு காமெய் வந்திருத்தல் ஆராய்தற்குரியது.