18. ஏர் என்னும் வைப்புத்தலம் - கும்பகோணத்திற்கு வடபால் இரண்டு மயில் தூரத்தில் ஏரகரம் என்ற சிற்றூர் ஒன்று உளது. அது சைவசமயாசாரியர் நால்வர்களாலும் பாடப்பெற்ற திருப்புறம்பியம் என்னுந்தலத்திற்குத் தென்கிழக்கே இரண்டு மயில் தூரத்திலும், திருஞானசம்பந்த சுவாமிகளாலும் திருநாவுக்கரசு சுவாமிகளாலும் பதிகங்கள் பாடப்பெற்ற இன்னம்பர் என்னும் திருப்பதிக்கு வடகிழக்கில் இரண்டு மயில் தூரத்திலும் இருக்கின்றது. கல்லாமக்கள் அதனை ஏராரம் எனவும் ஏராவரம் எனவும் வழங்குகின்றனர். அவ்வூர் இது போது மிகவும் அழிவுற்ற நிலையில் இருக்கின்றது. ஆயினும், பண்டைக்காலத்தில் நம் சோழமண்டலத்திற் சிறந்து விளங்கிய பேரூர்களுள், அச்சிற்றூரும் ஒன்றாக இருந்திருத்தல் வேண்டும் என்பதை அதனை ஒருமுறை பார்த்தோரும் நன்குணர்ந்து கொள்ளலாம். அப்பழைய வூரில் தென்மேற்குமூலையில் வயல்களுக்கு அணித்தாக ஒரு சிவாலயம் உளது. அது பாதுகாப்பாரின்றிச் சிதைந்து அழிந்துபோகும் நிலையில் இதுபோது இருக்கின்றது. அவ்வாலயத்தின் திருமதில்களும் திருச்சுற்று மாளிகைகளும் கோபுரமும் இடிந்து போயின; மகாமண்டபம்மாத்திரம் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. அத்திருக்கோயிலுக்கு யான் சென்று பார்த்தபோது அது பழமைவாய்ந்த ஒரு சிவாலயம் என்று துணிதற்குரியதாக இருந்தது. அதன் கருப்பக்கிரகத்தின் தென்புறத்தில் பெரியதோர் கல்வெட்டும் காணப்பட்டது. அக்கல்வெட்டு மிகச் சிதைந்தும் நிலத்திற் புதைந்தும் இருந்தமையின் அதனை முழுதும் படித்தற்கு இயலவில்லை . ஆயினும், அஃது எவ்வரசன் காலத்தில் வரையப்பெற்றது என்பதையும் அத்திருக்கோயில் அமைந்துள்ள ஊரின் உண்மைப்பெயர் யாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று. ஆகவே, நிலத்திற் புதைந்திருந்த பகுதியைச் சில நண்பரது உதவி கொண்டு தோண்டிப் பார்த்தபோது அது கி.பி. 1120 முதல் 1136 வரையிற் சோழமண்டத்திற் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஆட்சி புரிந்த விக்கிரமசோழன் காலத்துக் கல்வெட்டு என்பது நன்கு வெளியாயிற்று. விக்கிரமசோழனது நீண்ட மெய்க்கீர்த்தியில் 'ஐம்படைப்பருவத்து வெம்படைத்தாங்கியும்' என்பது முதலாகவுள்ள பகுதியும் காணப்பட்டது. பின்னர், அக்கல்வெட்டில் எஞ்சியபகுதியையும் இயன்றவரையில் முயன்று படித்துக்கொண்டு வருங்கால், இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்மடி சோழமங்கலம் என்னும் தொடர்மொழிகள் அத்திருக்கோயில் அமைந்துள்ள அவ்வூரின் பெயர் யாது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்தி மகிழ்வூட்டின. பிறகு, அவ்வூர் வைப்புத்தலங்களுள் ஒன்று என்பது எனது ஆராய்ச்சியிற் புலப்பட்டமையின் அதனை ஈண்டு வரையலானேன். சைவசமயகுரவர்களுள் ஒருவராகிய திருநாவுக்கரசு சுவாமிகள்