பக்கம்:சதுரங்கம் விளையாடுவது எப்படி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

சதுரங்கம் விளையாடுவது எப்படி?



அந்த வேதனையைத் தாங்கமுடியாத ஆதாம், தன் மனச்சுமையை இறக்கி வைத்து நிம்மதி பெற இப்படி ஒரு ஆட்டத்தைக் கண்டுபிடித்து விளையாடியதாக, பதினைந்தாம் நூற்றாண்டுக் கதை ஒன்று கூறுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாமைத் தொடர்ந்து ஷாம், ஜேபட், சாலமன் மன்னன் ஆடியதாகவும் அந்தக் கதை தொடர்கிறது.

இனி முகமதிய புராணத்திலிருந்து கூறப்படும் ஒரு கதையினை காண்போம்.

(13) முதலாம் நூற்றாண்டில், ஒரு ராணி அரசாண்டு வந்தாள். அவளுக்கு ஒரே மகன், உயிருக்குயிராய் காத்து, உள்ளன்புடன் நேசித்து வந்தாள்.

அரசியின் எதிரிகள் எவ்வாறோ இளவரசனைக் கொன்று, தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். இந்த இறப்புச் சேதியை அரசிக்குக் கூறுமாறு, கப்ளான் (Qaflan) என்ற தத்துவ ஞானியிடம் தூது சென்றனர்.

துன்பச் செய்தியை செவி மெடுத்து தத்துவ ஞானியும் தான் துணைவருவதாகவும், வழி காட்டுவதாகவும் உறுதி கூறினார். மூன்று நாட்கள் தீவிரமாக சிந்தித்து உழைத்தபிறகு அவர் ஒரு வழியினைக் கண்டறிந்தார்.