பக்கம்:சதுரங்கம் விளையாடுவது எப்படி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

35



ஆரம்ப காலத்திலிருந்து 12-ம் நூற்றாண்டுவரை, அரசருக்கு அடுத்து அமைச்சரே சக்தியுள்ளவராக வைக்கப்பட்டிருந்தார். ஆட்டத்தில் அமைச்சரை அகற்றி விட்டு, இராணியே இருக்க வேண்டும் என்ற நிலை எவ்வாறு எழுந்தது என்று இனி காண்போம்.

அரேபியா போன்ற முகமதிய நாடுகளில் அரசருடன் போருக்குச் சென்று, உடனிருந்து பணியாற்றியவர்கள் அமைச்சர்கள் தான். அதனால், அமைச்சர் என்பவர் அரசருக்கு அடுத்த நிலையில் ஆட்டத்திலிருந்தார்.

இங்கிலாந்து நாட்டில் எழுந்த ஒரு புதிய கழ்நிலையால், ராணி மேரியின் புகழ் பெருகியதால் தான் இந்த நிலை உருவானது. அதேபோல், வட இத்தாலியிலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

கேதரினா சபோர்சா (Caterina Saforza) என்ற மங்கை, இத்தாலியை ஆண்ட இளவரசனுக்குத் திருமணம் செய்விக்கப்பட்டாள். இளவரசனோ ஆட்சிப் பொறுப்பேற்று நடத்தும் ஆற்றலின்றி இருந்தான்.

நிலையுணர்ந்த கேதரினா, நிதானமிழக்காமல், நெடுமூச்செறிந்து கணவனைப் பழிக்காமல், காரியம் அற்றத் துணிந்தாள். போருடை அணிந்தாள். படைகளை நடத்திச் சென்று போரிட்டாள். வெற்றி பெற்றாள்.