பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 88

நோக்கியபோது, முத்தையா, குற்றவுணர்வுக் குரலில் தொனிக்க, அவள் கவனத்தை ஈர்த்துப் பேசினான்:

“ஸாரி மேகலா நாலு நாளாய் ஒங்க வீட்டுக்கு வர முடியல. அப்பாவால நடமாடுறதுக்கே ஒரு மாசம் ஆகும். இனிமேல் அவரை வியாபாரத்துக்கு அனுப்புறது தப்பு. வீட்ல பொருளாதார நிலமையும் சரியாய் இல்ல. அதனால. சாயங்காலத்துல பார்ட் டைம் வேலை ஏதாவது கிடைக்குமான்னு, இந்த நாலு நாளாய் ஒரே அலைச்சல். எந்தக் கம்பெனியும், நான் என்ன சொல்லப் போறேன்னு கேட்கக்கூடத் தயாராய் இல்ல. ஒரு ஒயின் ஷாப்லதான் பார்க்கலாமுன்னு சொல்லி இருக்காங்க. மகாத்மா காந்திக்கு ஜே போட்டுட்டு சேரலாமான்னு நினைக்கேன். எப்படியோ. எங்கப்பா நொண்டிக்காலோட வியாபாரத்திற்குப் போறதைவிட, நான் நொண்டிப் படிப்போட வேலைக்குப் போகத் தயாராய் இருக்கேன்."

"அப்போ படிப்பை டிஸ்கன்டினு பண்ணுறதுன்னு தீர்மானம் செய்திருக்கிங்களா?"

"தீர்மானமில்ல. வருமானமும் தன்மானமும் நிர்ப்பந்திக்கிற வழி. ஒங்க அப்பாவை, சதிகாரங்க சஸ்பென்ட் செய்தாங்க. என் படிப்பை, சந்தர்ப்பம் சஸ்பென்ட் செய்யப் போகுது."

மனக்கணக்கில், மகன் மைனஸாகப் போய்விட்டான் என்று தனக்குள்ளேயே நொந்து கொண்டிருந்த முத்தையாவின் தந்தை, அவனை நிமிர்ந்து பார்த்தார். குடும்பப் பொறுப்பை யாரும் கொடுக்காமலே ஏற்றுக் கொள்ள முன்வரும் தான்பெற்ற பிள்ளையை, ஏன் பெற்றேன் என்பதுபோல் ஏக்கமாக பார்த்தார். அவரால் எவ்வளவு படிக்க வைக்க முடியுமோ அவ்வளவு படிக்க வைப்பது என்று மனப்பால் குடித்த அந்த முதியவர், மகனிடம் படிடா. படிடா. வேலைக்குப் போகக்கூடாது என்று சொல்லத்தான் நினைத்தார். வாயைத் திறப்பதற்கு முன்பு, கால் வலித்தது. குடும்ப நிலைமை, அவரை குலைய வைத்தது. மெளனியாகி, மயங்கியவர்போல் கண்களைச் செருகிக் கொண்டார்.

அப்பாவின் ரியாக்ஷனை கவனித்த முத்தையா, உலகில் தங்களைப்போல் பரிதாபத்திற்குரியவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை தந்தைக்கு எடுத்துரைப்பவன்போல், "அப்பா எப்படி இருக்கார் மேடம்? கேஸ் எப்படி இருக்கு? நான் பாட்டுக்குக் பேசிட்டே இருக்கேன் பாருங்க. மொதல்ல உட்காருங்க. ஒரே ஒரு சின்ன இன்பர்மேஷன். எங்க வீட்டு நாற்காலியைவிட, இந்த தரை கெட்டி. அது கீழே விழாது. எதுல உட்காருறது என்பது ஒங்க இஷ்டம்." என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/100&oldid=558708" இலிருந்து மீள்விக்கப்பட்டது