பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 * சத்திய ஆவேசம்

அந்தக் குறுகிய வீட்டிற்குள் ஒரு கூட்டமே வட்டமடிக்கும் நிலைமையை, முதன் முதலாய் நேருக்கு நேராய் பார்த்த மேகலா, அனைவரையும் அனுதாபத்துடன் பார்த்தாள். பிறகு நார்க் கட்டிலையே ஆதாரமாகப் பிடித்து, தரையில் உட்கார்ந்தாள்.

தரையில் உட்கார்ந்த மேகலா சிதறிக் கிடந்த பழவகைகளையும், நார்க் கட்டிலில் கிடந்த பத்துருபாய் நோட்டுக்களையும் வினோதமாகப் பார்த்துவிட்டு, முத்தையாவைப் பார்த்தாள். உடனே அவன், "நான் இன்னும் வேலையில் சேரல. இந்தப் பழங்களும், அந்தப் பணமும்தான், ஒங்ககிட்ட சொன்னேனே கிருஷ்ணன் - அதுதான் டுப்ளிகேட் முத்தையா, அவன் கொண்டு வந்து கொடுத்திட்டுப் போன கூலி என்றான் சலிப்போடு.

மேகலாவிடம் எப்படியாவது பேசிவிடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த அன்னம்மா, அவளிடம் முறையிட்டாள்.

"நீ படிச்ச பொண்ணு. நீயே சொல்லும்மா.... இவன் சிநேகிதங்கன்னு ரெண்டு பேர் வந்தாங்க. இவன்கிட்ட வாங்குன கடனைத் தாறோமுன்னு அந்த ருபாயைத் தந்தாங்க. கொண்டு வந்த பழத்தை நாங்க திருப்பிக் கொடுத்தால், இவனைப் பற்றி மொதல்ல அவங்க என்ன நினைப்பாங்க? இது தெரியாமல் குதிகுதின்னு குதிக்கிறான்."

மேகலா, முத்தையாவைப் புதிராகப் பார்த்தபோது, அவன் 'தன்னிலை விளக்கம் சொன்னான்:

"என் வாயை அடக்குறதுக்காக அவன் கொடுத்துட்டுப் போன லஞ்சப்பணம்.”

மேகலா, அவர்கள் விவகாரத்தில் எப்படித் தலையிடுவது என்பது போல் கீழுதட்டை, மேலுதட்டால் விழுங்கினாள். இதற்குள் வெளியே ஒடிப்போன சுகந்தி, ஒரு கலர் நாற்காலியோடு வந்தாள். 'வீட்டுக்காரியிடம் போய் சினிமா வசனத்தைக் கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாய் இந்த நாற்காலியை வாங்கி வந்திருக்கிறாள். தரையில் இருந்த மேகலாவை, நாற்காலியில் அமரும்படி சுகந்தி, அவள் கையைப் பிடித்துத் தூக்கினாள். ஐந்து நிமிட நேரத்திற்குள் அன்னியமானவளாய் இருந்த தன்னை அந்தரங்கமானவளாய் ஆக்கிய அந்த குடும்பத்தினரைப் பார்க்கப் பார்க்க, மேகலா பரவசமானாள். முத்தையாவை, செல்லமாக அதட்டியபடியே கேட்டாள்.

"எல்லாரையும் நல்லவங்கன்னு நினைக்கது எவ்வளவு தப்போ, அவ்வளவு தப்பு உலகத்துல எல்லாரும் கெட்டவங்கன்னு நினைக்கது. ஒரு பணக்கார்ன். இன்னொரு பணக்காரனுக்கு உதவும்போது, ஒரு ஏழை இன்னொரு ஏழைக்கு ஏன் உதவப்படாது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/101&oldid=558709" இலிருந்து மீள்விக்கப்பட்டது