பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 * சத்திய ஆவேசம்

போனாள். ஆனால், வார்த்தைகளைவிட்டால், அவை விம்மல் சத்தத்துடன் வெளிக்கிளம்பும் என்பதை அறிந்ததும், சிறிதுநேரம் மெளனியாகிப் பிறகு நிதானமாகப் பேசினாள்.

"ஒங்க கஷ்டத்துக்கு, எங்க கஷ்டம் தூசு சார். இந்தக் காலத்துல நல்லதுக்குப் போராடுறது என்கிறது கெட்டதை அழிக்கிறது. இதனால் நாமே அழியலாம். இது தெரிஞ்சுதான், அப்பா இறங்கியிருக்கார். தைரியமாய்த்தான் இருக்கோம். ஆனாலும், இப்போ வரவர, எங்களுக்கு ஒரு சந்தேகம் வருது. நல்லவங்களாய் வாழ்ந்தால், ஒன்று. எதிரிகளே அவங்களை அழிக்கிறாங்க அல்லது இயற்கையே அழிக்க வருது இல்லன்னால், ஒங்களுக்கு ஏன் கால் ஒடியனும்?

அருணாசலம், மேகலாவை உதடுகள் துடிக்கப் பார்த்தார். ஏதோ பேசப்போனார். கண்களை நீரும், வாயை கனமான ஏதோ ஒன்றும் அடைத்துக் கொண்டன. இதற்குள் அன்னம்மா, பழங்களை நறுக்கி, ஒரு ஈயத்தட்டில் வைத்து மேகலாவிடம் நீட்டினாள். மேகலா, இரண்டு துண்டுகளை, சுகந்தியிடமும், கமலசுந்தரியிடமும் கொடுத்துவிட்டு, கையேந்திய தட்டை முத்தையாவிடம் நீட்டினாள். பிறகு திடீரென்று நினைத்துக் கொண்டவள்போல், "சரி. நான் புறப்படுகிறேன். அப்பா கோர்ட்டுக்கு வருவார். இன்னைக்கு மெட்ராபாலிட்டன் கோர்ட்ல, அந்தப் பத்திரிகைக்கு எதிராய் வழக்குப் போடுகிறோம். கோர்ட்ல அவரை சந்திக்கிறதாய் சொல்லியிருக்கேன்" என்று முத்தையாவைப் பார்த்துச் சொன்னபடியே எழுந்தாள். பிறகு, கமலசுந்தரியையும், சுகந்தியையும் பார்த்து, "நீங்க வீட்டுக்கு வரணும். ஒரு வாரத்துல, நானே வந்து அழைச்சிட்டுப் போறேன்." என்று சொல்லிவிட்டு, அருணாசலப் பெரியவரை, பாதாதிகேசம் வரைப் பார்த்தாள்.

அருணாசலம் தயங்கியபடியே எழுந்த மகன் முத்தையாவைப் பார்த்து, "நீயும் மேகலாவோட கோர்ட்டுக்குப் போப்பா. இந்தா இந்தப் பணத்தையும் எடுத்துக்கோ. அவங்கள கண்டுபிடிச்சு பணத்தைக் கொடுத்திடு. வச்சுக்கனுமுன்னு வற்புறுத்திட்டாங்கன்னு வரப்படாது. வரும்போது வெறும் கையோடுதான் வரணும்...” என்றார், ஆணைக்குரலில். மேகலா, தான் கொண்டு வந்திருக்கும் ருபாயை, அங்கேயே கொடுக்கலாமா என்று நினைத்தாள். பிறகு, அந்தச் சந்தர்ப்பம் அவளுக்கு உகந்ததாகத் தெரியவில்லை. இடுப்பைத் தொட்ட கரத்தை எடுத்துக் கொண்டாள்.

மேகலாவை, அன்னம்மாவும், அவள் தோழிகளும் வாசல் வரை வந்து வழியனுப்பினார்கள். சுகந்திக்கு, மேகலாவைப் பிரிய மனமில்லை. அவளோடு இருப்பதற்காக, தானும் கோர்ட்டிற்குப் போகலாமா என்றுகூட நினைத்தாள். பிறகு அண்ணனைப் பார்த்தாள். அவர்களுக்குள் ஆயிரம் இருக்கும் கமலசுந்தரி பிரிவாற்றாமையை கண்களிலேயே காட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/103&oldid=558711" இலிருந்து மீள்விக்கப்பட்டது