பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 * சத்திய ஆவேசம்

முகம் சரிந்து, கண் பிதுங்கி இருப்பதைப் பார்த்துவிட்டு, பேசுவதற்கு வார்த்தைகளைத் தேடி, தன்னுள்ளே அலைந்தான். பேராசிரியர், ஆங்காங்கே மரங்களுக்கு வேர்களாகி, மண்ணுக்கு போகப்போகிறவர் கள்போல், கைகளால் மண்தரையைக் குடைந்த மனிதர்களைப் பார்த்தார். அவர்களைப் பார்க்கப் பார்க்க, அவர்களில் தானும் ஒருவன், இனிமேல் அப்படி தவம் இருக்கப்போகிறவன் என்பதை உணர்ந்தார். இதற்குள் வக்கீல் இளைஞர் அங்கே வந்தார். பெருமாள் சாமியின் கையை, பலவந்தமாகப் பிடித்துக் குலுக்கியபடியே, "குட் நியூஸ் ஸார். ஒங்க மனுவை இப்பவே புட்டப் பண்ண பெஞ்ச் கிளார்க் சம்மதிச்சுட்டார். அப்புறம் பாக்ஸ்ல நின்னு எப்படிப் பேசணுமுன்னு நான் சொல்லிக் கொடுத்தது ஞாபகம் இருக்குதா ஸார்.? என்றார்.

"இருக்குப்பா இருக்கு என்னத்த பெரிசாச் சொல்லப் போறேன். எதையும் ஜோடிச்சுப் பேசப் போறதுல்ல. என்னைப் பற்றி நான் தெரிஞ்சு வச்சிருக்கிறதை சொல்லப்போறேன். இதுல யோசிக்கதுக்கு எதுவுமே இல்லை. இதுல ஒரே ஒரு டிரபிள் என்னன்னால், டிரஸ்ட் போர்ட் எத்தனாம் தேதி என்னை சஸ்பென்ட் செய்தது, எத்தனாம் தேதி பத்திரிகையில அந்தச் செய்தி வந்தது, எத்தனாம் தேதி காலேஜ்ல நுழைந்தேன், எத்தனாம் தேதி மாணவர்களை வெளியேற்றினேன், எப்போ அவங்கள சேர்த்தேன்னு தேதிகளை ஞாபகம் வச்சுக்க வேண்டியதிருக்கு எனக்கு காலேஜ்ல படிக்கிறதுல இருந்து, இந்தத் தேதி என்றாலே அலர்ஜி. அதனாலதான் ஹிஸ்டரிக்குப் பதிலாய் எகனாமிக்ஸ் எடுத்தேன். இப்போ வாழ்க்கையே அலர்ஜியாய் போனதால, அலர்ஜி சமாசாரத்தை எல்லாம் மனப்பாடம் செய்ய வேண்டியதிருக்கு. சீ. என்ன லைப்டா இது."

"அதுக்குச் சொல்லல ஸார். பேசும்போது பிடிகொடுத்துப் பேசப்படாது என்று சொல்ல வந்தேன்."

"என்னை எல்லோரும் ஒரே பிடியாய் பிடிச்சாச்சு. இனிமேல் பிடியோட பேசினால் என்ன, பேசாட்டால் என்ன? மாஜிஸ்டிரேட் மனசுல பிட்டி வந்தால் போதும்."

"இன்னொரு தடவை சொல்லித் தரட்டுமா ஸார்..?"

"எத்தனையோ மாணவர்கள் கிட்டே ஆசிரியராய் கேள்வி கேட்டேன். இப்போ நானே மாணவனாய் நிற்கிறேன். ஆனால், ஒரே ஒரு வித்தியாசம் அவங்க பரீட்சையில் தேறணுமுன்னு கேள்விமேல் கேள்வியாய் கேட்டேன். இப்போ நானே பிறத்தியார் எழுதுற பரீட்சையாய் போயிட்டேன். பார்த்தியா முத்தையா! ஒன்னோட பேராசிரியரோட நிலைைமயை? பாக்ஸ்ல எப்படிப் பேசப் போறேன்னு ஒன்கிட்டே ஒப்பிக்கிறேன். நீயும் கொஞ்சம் சரிபார்த்துச் சொல்றீயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/105&oldid=558713" இலிருந்து மீள்விக்கப்பட்டது