பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்திய ஆவேசம்

மாணவர் போராட்டத்தைத் தடுப்பதற்காக - அப்படிச் சொல்வது கூடத் தவறு, தகர்ப்பதற்காக, கல்லூரி நிர்வாகம், கையாண்ட பல வேலைகள் பளிச்சென்று தெரிந்தன. மாணவர் பிரச்சனைக்கு முடிவு காண்பதற்குப் பதிலாக, மாணவர்களையே முடிவு கட்ட நினைத்தது போல், நிர்வாகத்தின் ஏற்பாட்டில், இரும்புத் தொப்பியும், கேடய முறமும் கொண்ட போலீஸ்காரர்கள், ஏதோ எதிரி நாட்டிற்குப் படையெடுக்கப் போதுவது போல், அணிவகுத்து நின்றனர். உதவி போலீஸ் கமிஷனர், காரிலிருந்து இறங்கியதும், அவரையே தாக்கப் போவது போல் ஒடினார்கள். அவர், ஆற அமர இறங்கி, போலீஸ் வியூகத்திற்கு வழி சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு போலீஸ் ஜீப்பில், ஒயர்லஸ் சத்தம் பலத்துக் கொண்டே இருந்தது. கல்லூரி வாசல்களின் இரு கதவுகளும், வாசலுக்கு முக்காடு போட்டு, முக்காட்டில் மோவாயை மட்டும் காட்டும் பெண்போல, ஒன்றிற்கு ஒன்று, இரண்டடி இடைவெளியில், ஒற்றையடிப் பாதை வழியாகி நின்றன. வெளிக் காம்பவுண்டில் இரண்டு கரும்பலகைகள் சாத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒன்றில், அன்றைக்கு சஸ்பென்டாகி இருக்கும் மாணவர்கள் பெயர்ப் பட்டியல் எழுதப்பட்டிருந்தது. இன்னொரு பலகையில், எக்ஸ்பெல் செய்யப்பட்டிருக்கும் மாணவர்கள் பெயர்ப் பட்டியல், ஏதோ பத்மபூரீ பட்டம் கொடுத்தது போல், வண்ண வண்ண சாக்பீஸில் எழுதப்பட்டிருந்தது. தொலைவில் இருந்து பார்ப்பவர்களுக்கு, ஹோட்டல்களில், ஸ்பெஷல் அயிட்டங்கள் எழுதி வைக்கப்பட்டிருப்பது போல் தோன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/13&oldid=558615" இலிருந்து மீள்விக்கப்பட்டது