பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 * சத்திய ஆவேசம்

கன்னையா இறங்கினார். திமிரெடுத்து நின்ற அந்த மூன்று மாடிக் கட்டிடத்தையும் பக்கவாட்டில் குமிழ் குமிழாய் நின்ற கட்டிடங்களையும், ஏற்ற இறக்கமாகப் பார்த்தார். காம்பவுண்டிற்குள் காகித பாரங்களோடு நான்கைந்து டெம்போக்கள் நின்றன. ஏழெட்டு நபர்கள், பத்துப் பதினைந்து ஸ்கூட்டர்கள், அங்குமிங்குமாய் காகிதங்களை இறக்கிக் கொண்டும் பத்திரிகை பிரதிகளை ஏற்றிக் கொண்டும் செயல்பட்ட தொழிலாளர்கள். அந்த பத்திரிகைக்கு அங்கேதான் பிரஸ் இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில், யந்திரங்கள் அலறின.

கன்னையாவை, இருவரும் ஒரு கண்ணாடி அறைக்குள் கொண்டு வந்தார்கள். சுழல் நாற்காலியில் சுற்றிய ஒரு அம்மைத் தழும்பு மனிதரைப் பார்த்து, கன்னையா கும்பிட்டார். ஜூனியர் நிருபன் சுட்டிக் காட்டிய இருக்கையில் அமர்ந்து, கண்களைத் தாவவிட்டார். நான்கைந்து நவநாகரிகப் பெண்களும், முப்பது வயசுள்ள ஒரு சாதாரணப் பெண்ணும், நாற்காலிகளில் அமர்ந்திருக்க, மூன்று இளைஞர்கள், சுவரோடு போடப்பட்ட பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்திருக்க, அங்கே தவக்களை கோலோச்சியது. சிலர் பையில் போட்டோக்கள். சிலர் கையில் கத்தை கத்தையாய் காகிதக் குவியல்கள். அவர்கள் கண்களில் ஒரு ஆவேசம். காற்றில் ஏறி விண்ணையும் சாடுவோம் என்று பாரதி சொன்னது போல், அந்தப் பத்திரிகையில் ஏறி, நாலரைக் கோடி தமிழர்களையும் செக்ஸால் அடிக்கப் போவது போன்ற ஆவேச ஆவல். இதற்குள் சீனியர் நிருபன், இண்டர்காமில் பேசினான். பிறகு வெளியேறினான்.

கன்னையா, அம்மைத்தழும்பு மனிதரையே பார்த்தார். பத்திரிகை முதலாளி, தன்னிடம் ஏன் பாராமுகமாய் இருக்கிறார் என்று யோசிப்பவர் போல் , பலவீனப் பட்டார். அவர், சிந்தனை கலையும் முன்பே, வெளியே போன சீனியர், உள்ளே தலையை மட்டும் காட்டி உம் என்றான். உடனே ஜூனியர் நிருபன், கன்னையாவைப் பார்த்து, எழும்படி சைகை செய்தான். அவரை மாட்டைப் பற்றுவது போல பற்றப் போனான், அம்மைத் தழும்பு மனிதர் "எம்.டி... ஒங்களுக்காகத்தான் காத்திருக்கார் என்றார். பெண்களில் சாதாரணப் பெண் நான் அப்பவே வந்து காத்திருக்கேன் ஸார் என்றாள். உடனே அம்மைத் தழும்புக்காரர் "இது என்ன, எம்ப்ளாய் மென்ட் ஆபிஸா? அங்கே கூட கியூ என்கிறது ஒப்புக்குத்தானே என்றார். அந்த நந்தி தேவனின் நகைச்சுவையில் பரவசப் பட்டவர்கள் போல், மூன்று பெண்களும், ஜூனியர் நிருபனும், சிரிப்போ சிரிப்பென்று சிரித்தார்கள். கதவிடுக்கில் சீனியன் தலையை மட்டும் காட்டி சிரித்தான். அது அந்த கதவே சிரிப்பது போலிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/143&oldid=558751" இலிருந்து மீள்விக்கப்பட்டது