பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* க.சமுத்திரம் 150

அரிசிக்கு இரண்டு ருபாய், வெஜிடேபிள் ஒரு ரூபாய். நீங்க இப்போ சாப்பிடாமல் போறதால இந்தக் கணக்கு."

பேராசிரியர், தப்புக் கணக்குப் போட்டவர் போல் மகளைப் பார்த்தார். கணக்கின் விடையைச் சரியாக கண்டுபிடிக்க முடிந்தாலும், அதன் வகை தொகைகளை எழுதத் தெரியாத கிராமத்து மாணவன்போல் விழித்தார். பிறகு, மேகலாவின் முதுகைச் செல்லமாகத் தட்டி கொடுத்துவிட்டு, வாசலுக்குப் போய் கதவைத் திறந்தவர், வாசலின் இன்னொரு கதவுபோல் அங்கேயே நின்றார். அவர் நிற்பதைப் பார்த்துவிட்டு மேகலாவும், தந்தையின் முதுகிற்குப் பின்னால் உடல் மறைத்து, அவர் தோளுக்கு மேலே தலையை நீட்டி, எட்டிப் பார்த்தாள்.

அசோக சிங்கங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைக் காரிலிருந்து, எட்டுப்பேர் இறங்கினார்கள். அறுவர் ஆண்கள்; இருவர் பெண்கள். நான்கு ஆண்கள் டிப்டாப் டிரஸ்காரர்கள். இரண்டு பேரில் ஒருவர் வெள்ளை ஜிப்பா. இன்னொருவர் வேட்டி கட்டிய சிலாக்கர். பெண்களில் ஒருத்தி சிவப்புச் சேலையில், மஞ்சள் நிறம் கையில் குறிப்பெடுக்கும் நோட்டையும், அதன் இடையில் செருகப்பட்ட பென்சிலோடும் காணப்பட்டாள். இன்னொருத்தியின் உடலும் உயரம், பார்வையும் உயரம். பாரின் புடவை. உள்நாட்டு ஜாக்கெட் இரண்டு பக்கமும் சேராத கொண்டைக்காரி.

பேராசிரியரை வழிமறிப்பதுபோல், எட்டுப் பேரும், வாசலுக்கு வெளியே நின்றார்கள். ஒருவேளை, நன்றி மறக்காமல், ஏணியை பார்வையிட வந்த, ஏற்றமிகு பழைய மாணவர்களா என்ற சந்தேகத்தோடு, பெருமாள்சாமி, அவர்களை ஆசிரியத்தனமாய்' பார்த்தார். தலைவர்போல் தோன்றிய சந்தனச்சபாரி, பேராசிரியரை, அதிகாரத்தனமாய் பார்த்த சகாக்களை, படைக்கலன்களை பார்வையிடும் ராணுவ தளபதிபோல பார்த்துவிட்டு, பேராசிரியருக்கு, கடுகடுப்பான புன்முறுவலை காணிக்கையாக்கி விட்டு, வாசலக்குள் நுழையாமலே பேசினார்.

"விய் ஆர் புறம் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்ட். என் பேர் சிதம்பரம். அஸிஸ்டெண்ட் டைரக்டர். இவர்கள் முன்று பேரும் இன்கம்டாக்ஸ் இன்ஸ்பெக்டர்கள். இந்தம்மாவும், இன்ஸ்பெக்டர். அந்தம்மா ஸ்டெனோ. இவங்க ரெண்டுபேரும் சாட்சிகள்."

"நீங்க யாரைப் பார்க்க வந்தீங்க? இது இரண்டாவது அவென்யூவில் நாலாவது கிராஸ் தெரு..."

"நீங்கதானே, பேராசிரியர் பெருமாள்சாமி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/162&oldid=558769" இலிருந்து மீள்விக்கப்பட்டது