பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 * சத்திய ஆவேசம்

தலைகுனிந்தான். அப்போது, காடு மேடுகளே காலில் ஏறியதுபோல்,

தடித்த செருப்பைப் போல, காய்ப்புக்கள் கொண்ட தந்தையின் பாதங்கள் கண்ணில் பட்டன. இரண்டு வாரத்திற்கு முன்பு, கோணிக்கட்டில் பதிந்திருந்த இரும்புத் தகடு குத்தி, இன்னும் காயம் ஆறாமல் துருத்திக் கொண்டிருக்கும் வீங்கிய பாதத்தைப் பார்த்தான். அந்தப் பாதத்தைப் பார்க்க முடியாமல், நீர் கோர்த்த விழிகளோடு தன் தந்தையின் முகத்தை ஏறிட்டு நோக்கினான்.

அந்த முகத்தில், அப்படி ஒரு விசித்திரமான வெளிப்பாட்டை அவன், இதுவரை பார்த்ததில்லை. அந்த முகம் பாசத்தாலோ அல்லது கோபத்தாலோ, அவனை விழுங்கப்போவது போல் உப்பியது. உதடுகள் துடித்தன. மீசைமுடி குத்திட்டு நிற்பதுபோல் தோன்றியது. கண்கள், ரத்தக் கொப்புளங்களாயின. கோணிக் கடை முதலாளிகள் ஐந்து ருபாய் பெறும் லைட்டரீஸ் கோணியை, இரண்டு ருபாய்க்குரிய உப்புக் கோணியாகக் கழிக்கும்போது, காட்ட முடியாத கோபமும், எங்கடா. கோணி வாங்குனே என்று அரை ரூபாய்க்காக, போலீஸ்காரர்கள் அதட்டும் போது பதில் பேசமுடியாத கோபமும், ஏய் கோணிக்காரா. என்று சில பெண்கள் விளிக்கும் போது, சீற முடியாமல் சிரித்து மழுப்பும் கோபமும் - அத்தனை செல்லாக் கோபமும், இப்போது செலவிடக் கூடிய கோபமாக அவர் முகத்தின் பல்வேறு தசைகளில் ருடமெடுத்தது. அதேசமயத்தில், கிராமத்தில் நிலத்தை செழிக்க வைக்க கடன் வாங்கி, பிறகு அந்தக் கடனுக்கான வட்டியை அடைக்க நிலத்தையே விற்று சென்னைக்கு வந்தபோது ஏற்பட்ட சோகம், மனைவி அன்னம்மாவுக்கு மகிழ்ச்சியோடு கட்டிய தாலியை, ஒரு சமயம், மார்வாடிக்காக, வெறும் மஞ்சள் பூசிய கயிற்றைக் கட்டிவிட்டு, பறித்த போது ஏற்பட்ட சோகம், இரண்டு பெண்களும் வயதுக்கு வந்த போது ஏற்பட்ட சோகம் - அத்தனை சோகமும் இப்போது அழப்போகிற சோகமாய் கண்களில் நீராகி நின்றன.

மூவரும் பேசிக் கொள்ளவில்லை. முத்தையா, தாய் தந்தையரைப் பார்ப்பதும், பிறகு தன்னைத்தானே பார்த்துக் கொள்வதுமாக இருந்தான். தாய்க்காரி, திடீரென்று, தன் மகனின் தலையைக் கோதிவிட்டாள். அதுவே கணவனின் கோப வெடிக்குத் தீயிட்டது போலாயிற்று. உஷ்ணத்தோடு வெடித்தார்.

'எருது நோவு காக்கைக்கு தெரியாது எங்கிற மாதிரி அவன் நடக்கான். நீ தலயா கோதிவிடுறே? விடு. நல்லா விடு. நாமளும், நம்ம மகள்வளும் நினைக்கது மாதிரி. பி.ஏ. முடிச்சுட்டு, அப்புறம் ஆபீஸராய் மாறி, இப்போ ஒன்கிட்டே அம்மான்னு சொல்லி ஆயிரம் ருபாய் நீட்டுறான் பாரு. நல்லா தலையக் கோதி விடு. தலய மட்டும் கோதி விடப்படாது.டி. இந்த பிள்ளய... இடுப்புல வச்சுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/17&oldid=558620" இலிருந்து மீள்விக்கப்பட்டது