பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 158

சான்றிதழ்; மேகலா, கல்லூரியில பேச்சுப் போட்டிகளில் முதலாவதாக வந்ததை எழுத்தில் காட்டும் சான்றிதழ்கள். மலைத்துப்போன உதவி டைரக்டர், நான்காய் மடிக்கப்பட்ட ஒரு சிவப்பு காகிதத்தின் மடிப்புகளைக் கலைத்தார். மார்வாடி ரசீது. நாலு பவுன் தங்கச் செயின், மேகலாவின் கழுத்தில் தங்காமல் வட்டிக் கடைக்காரனிடம் இரண்டாயிரம் ரூபாய்க்கு தங்கியிருப்பதைக் காட்டும் வரலாற்றுக் காவியம்.

அஸிஸ்டெண்ட் டைரக்டர், பேராசிரியருக்கு அனுதாபம் காட்டத் துவங்கினார். ஆனாலும் அவர் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. அதெப்படி? அவ்வளவு பெரிய மனிதர்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்காங்க... எப்படிப் பொய்யாகும்? அவர், சின்ன அறைக்குள் போனவர்களுக்காகக் காத்திருந்தார்.

சின்ன அறைக்குள், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், செல்பில் இருந்த புத்தகங்களைக் கீழே தள்ளி, சாதனை புரிந்து விட்டார்கள். நெப்போலியன், செயின்ட்ஹெலினா தீவில் சிறையிலடைக்கப்பட்டதை சின்ன விஷயமாக்கும் வகையில், அவன் படம் போட்ட புத்தகம், குப்புறக் கிடந்தது. கீன்ஸின் பணம் வட்டி-சேமிப்பு பிணம் போல் கிடந்தது. சத்தியசோதனை, வீட்டுக்குள் இருந்த ஒரு சின்னஞ்சிறு குழிக்குள் கிடந்தது. பென்ஹாம் எகானாமிக்ஸ் அட்டை கிழியத் துடித்தது. கார்ல் மார்க்ஸ் அண்ணாந்து பார்த்தார்.

புத்தகங்கள் பொத்துப் பொத்தென்று போடப் படுவதை சகிக்க முடியாத பேராசிரியர், உள்ளே வந்தார். இன்ஸ்பெக்டர்கள் கீழே எறியப்போன டாஸ் கேபிட்டலை, அவர்களிடமிருந்து கோபமாகப் பறித்தார். அவர், உள்ளே வந்ததால் இன்ஸ்பெக்டர்களுக்கு சந்தேகம் வலுத்தது. ஒவ்வொரு புத்தகத்தின் அட்டையையும் பிரித்தார்கள். தாள் தாளாகப் புரட்டினார்கள். மொத்தத்தில் குரங்குகள்கூட பூமாலைகளைக் கொடுத்தால், இப்படிச் செய்யாது. அவர்கள் விடவில்லை. அட்டைப் பெட்டி ஒன்று வண்ணத்தில் மின்னியது. உள்ளே கைவிட்டார்கள். கள்ளப் பணத்திற்குப் பதிலாக கரப்பான் பூச்சிகள் வந்தன. முதலீட்டுப் பத்திரங்களுக்குப் பதிலாக, மூன்று எலிகள் துள்ளிக் குதித்தன. எதுவுமே இல்லை. இருக்க வேண்டியவைகள் கூட இல்லை.

இன்ஸ்பெக்டரம்மாவும், தன் பங்குப் பணியை ஆற்ற விரும்பினாள். மேகலாவை கூட்டிக் கொண்டு சமையலறைக்குள் போனாள். எப்போதோ வாங்கிய கேஸ் அடுப்பை புரட்டினாள். ஒவ்வொரு பாகங்களும் கீழே விழுந்தன. டப்பா டப்பாவாகத் திறந்து பார்த்தாள். மிளகாய் நெடியை மட்டும் நுகரக்கூடிய டப்பா பெருங்காய வாசனையை மட்டும் நுகரக்கூடிய டப்பா, சீர்கெட்ட சீரக டப்பா, ரோஷங்கெட்ட உப்பு டப்பா. ஆனாலும் இன்ஸ்பெக்டரம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/170&oldid=558777" இலிருந்து மீள்விக்கப்பட்டது