பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* க.சமுத்திரம் 188

சிந்தனை வசப்பட்ட ஜி.எம், சுழல் நாற்காலியை சுற்றாமல் வைத்தபோது, தொழிலாளர்களின் உத்தேச வேலை நிறுத்தத்தைப் பற்றிப் பேசுவதற்காகவும், கவுண்டர் நடவடிக்கைகளை ஆலோசிப்பதற்காகவும், டெப்டி, அஸிஸ்டண்ட, ஜாயிண்ட், அடிஷனல் மானேஜர்கள், செக்யூரிட்டி ஆபீசர், பெர்ஸனல் ஆபீசர் உட்பட பலர் வந்து கூடினார்கள. ஜிஎம், அவர்கள் கண்படும் படியாக வாடிக்கைப் பத்திரிகையை பிரித்தார். அப்படியும் அவர்கள் கண்டுக்காதபோது, அவரே, இதைப் பாருங்க- என்று, வாழைப்பழத்தை உரித்துக் கொடுப்பதுபோல், பத்திரிகையைப் பிரித்துக் கொடுத்தார். அவ்வளவுதான். சபார்டினேட்டுகளுக்கிடையே, முட்டாள் தனத்திற்கு முழுப்போட்டி ஏற்பட்டது. ஒருவர் படிக்க, மற்றவர்கள் கேட்டார்கள். அப்புறம் ஒரே கசாமுசா பேச்சுக்கள் அவரோட டாட்டர், நாட்டியம் ஆடுவதால், நாட்டியத்திற்குத்தான் பெருமையாம். ஜி.எம். எப்படி நிர்வாகக் கலையில் ஜீனியஸ்ஸோ, அப்படி அவர் டாட்டரும் நாட்டியக் கலையில் ஜீனியஸ்லாம். அவளுக்கு தேசிய பரிசு நிச்சயம் கிடைக்குமாம்.

ஜிஎம்மோ தலையைத் தாழ்த்தி ஒரு கோப்பைப் படிப்பது போல், பிகு செய்தார். அப்புறம் "இந்தப் பத்திரிகை எதுக்காக இப்படி அமர்க்களப்படுத்தணும்? ஐ டோன்ட் லைக் பப்ளிசிட்டி என்றார். உடனே ஜூனியர் சகாக்கள் தங்கள் பாஸுக்கு, எப்படியெல்லாம் பப்ளிசிட்டி பிடிக்காது என்பதற்கு பப்ளிசிட்டி கொடுப்பது மாதிரி பேசினார்கள்.

ஒரு வழியாய், ஒருமணி நேரத்திற்கு சற்றே கூடுதலாக முகத்துதியை முடித்துக்கொண்டு, தொழிலாளர் பிரச்சனையை ஒப்புக்குப் பேசிவிட்டு, பேக்டரி பெர்ஸனல்கள் போய்விட்டார்கள். அவர்களின் புகழஞ்சலியை மாடு மாதிரி காதுகளில் மீண்டும் அசைபோட்ட ஜி.எம்., பெல்லடித்தார். அதன் சத்தம் ஒயும் முன்னாலேயே, யூனிபார பியூன் ஓடிவந்தார். "கன்னையாவை கூட்டி வாய்யா. ஒரு மினிட் கூட டிலேய் செய்யாமல், கையோட கூட்டி வா" என்றார்.

கால்மணி நேரத்தில், கன்னையா வந்தார். ஜி.எம்மை, கண் நடுங்கப் பார்த்து, கை நடுங்கக் கும்பிட்டார். காக்கி நிஜாருக்குள்ளும், அதே போன்ற சட்டைக்குள்ளும், அந்த பூஞ்சையான உருவம், எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தது. கையெல்லாம் ஒரே எண்ணெய். ஜி.எம். கத்தினார்

"ஏன்யா, ஒரு ஜி.எம். அறைக்குள்ளே எப்படி வரணுமுன்னு ஒனக்குத் தெரியாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/200&oldid=558807" இலிருந்து மீள்விக்கப்பட்டது