பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 10

தந்தை, மகனையே பார்த்தார். சிறிது நேரம் வாயாடவில்லை. பேச்சாடவில்லை. பின்னர், அவர் அழுத்தந்திருத்தமாகப் பேசினார்.

"பெத்தவனுக்குப் பிள்ள துரோகம் பண்ணுனாலும் பண்ணலாம். ஆனால் பிள்ளைக்கு பெத்தவன் துரோகம் பண்ணப்படாது. ஒன்னைப் போராடாதேன்னு நான் சொல்றது, ஒனக்கு நான் துரோகம் செய்யுறது மாதிரி. ஏழப் பசங்களை அடிக்கவன் முன்னால இன்னும் அடின்னு பிடிச்சுக் கொடுக்கது மாதிரி. நீ என்ன செய்யனுமோ, பசங்க என்ன செய்யணுமுன்னு எதிர் பார்க்காங்களோ.. அதைச் செய். எந்தப் பயலாவது பசங்கள அடிக்க வந்தால் ஆள் அனுப்பு, நான் கத்தியோட வாரேன்."

முத்தையா, தன் தந்தையின் கரங்களை எடுத்து, கண்களில் ஒற்றிக் கொண்டு, பிறகு அம்மாவைப் பார்த்தபோது, திடீரென்று கல்லூரிப்பக்கம் சத்தம், கத்தலாகக் கேட்டது. உடனே, பின் தலையில் கால்கள் தொடுவதுபோல் ஓடினான்.

கல்லூரி மாணவர்கள், அங்குமிங்குமாக நடமாடினார்கள். சிலர் போலீஸாரோடு வாதாடிக் கொண்டிருந்தார்கள். போலீஸோ, குதிகாலைத் துக்கியபடி, லத்திக் கம்பை உயர்த்தியபடி, நின்றது. வாசல் பக்கம், ஒரு இளம் பெண்ணும், மாணவன் ஒருவனும், ஒருவரையொருவர் அடிக்கப்போவதுபோல், கைகளை வீசியபடியே, வார்த்தைகளே வராமல், வெறுமனே கத்திக் கொண்டிருந்தார்கள்.

முத்தையா ஒடிப்போய், அந்த இளம் பெண்ணிற்கும், இளைஞனுக்கும் இடையே நின்று கொண்டான். அவனைப் பார்த்ததும், மாணவர்கள் அந்தப் பக்கமாக, கும்பல் கும்பலாகக் குவிந்தார்கள். போலீஸார், அந்தப் பெண்ணைச் சுற்றி, வட்டமாக வியூகமாக நிற்கப் போனார்கள்.

கம்பீரத்திற்கு முக்கியத்தும் கொடுத்து, அழுகையை உள்வாங்கிக் கொண்டவள்போல் காணப்பட்ட அந்தப் பெண்ணை, முத்தையா நேராகப் பார்த்தான். கல்லூரி முதல்வரின் மகள். பலதடவை அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டிகளில் பார்த்திருக் கிறான். பெண்கள் கல்லூரி ஒன்றில் படிக்கிறவள். அப்பாவை போல், கெஞ்சாமலும் அஞ்சாமலும் எதையும் மிஞ்சிப் பார்க்கும் கண்காரி. ஈரப்பட்டது போல் தோன்றும் குளுமையான உடம்பு. சுட்ட செங்கல் நிறம். ஹைகீல்ஸ் தேவையில்லாத உயரம். மொத்தத்தில், நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/22&oldid=558625" இலிருந்து மீள்விக்கப்பட்டது