பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 :* சத்திய ஆவேசம்

"நீங்க வேற. தேர்தல் பொறுப்பை மிஸ்டர் அப்பாவு கிட்டே விட்டுடுவோம். அவர் பார்த்துக்குவார்."

"ஆமாம், ஆமாமாம்."

டிரஸ்ட் போர்ட் கூட்டம் முடிந்தது. டீ பார்ட்டி தடபுடலாய் நடந்தது. சங்கர் தவிர, எல்லா உறுப்பினர்களும் தாமரையானார்கள். அல்லிப் பூவான அப்பாவுவின் மகன், போர்டின் முடிவை எதிர்பார்த்து, கல்லூரிக்கு வெளியே, காரில் காத்திருக்கும் மனைவிக்கும், மாமனாருக்கும் என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் உதடுகள் துடிக்க, அவர்கள் முகத்தில் எப்படி விழிப்பது என்று தெரியாமல் கண்கள் எரிய, தவித்தார். இந்த லட்சணத்தில், ஆனானப்பட்ட அப்பாவு, மகனைப் பார்த்து "லட்டை ஏண்டா சாப்பிடலே?" என்றார்.

ஊரடங்கிய இரவின் உச்சி நேரம்.

குழந்தை பாலுக்கு அழுவது போல் கத்திய ஒரு பூனையின் சப்தத்தை தவிர, எல்லாம நிசப்தம். எல்லாம் ஒடுங்கி எல்லோரும் முடங்கிக் கிடந்த நடுநிசி.

'எம்மோ என்று கத்தியபடியே, பேராசிரியர் பெருமாள்சாமி, கட்டிலில் இருந்து எழுந்தார். யாரோ நான்கைந்துபேர், அவர் தலையை வளைத்து, கழுத்தோடு சேர்த்து, கட்டிலோடு சேர்த்து அமுக்கிவிட்டு, பிறகு வேட்டியை அவிழ்த்துவிட்டு, அவரை நிர்வாணமாக்கி, ஒரு தெரு வழியாய் துரத்திக் கொண்டிருப்பது போன்ற ஒருவரிடமும் சொல்ல முடியாத கனவு. வேட்டியை இருகையாலும் இறுகப் பற்றியபடியே எழுந்தவர், தான் போட்ட சத்தத்தில், அந்தத் தெருவே கலைந்திருக்குமே என்று வெட்கப்பட்டார்.

தரையில், பாயில் வெளியுலகைப் பார்க்க விரும்பாதவள்போல், தரைக்கு முகங்காட்டி, குப்புறப் படுத்துக் கிடந்த மேகலா, குறைந்தபட்சம் புரண்டு படுக்காததில் இருந்து, தான் போட்ட சத்தம், தன் அடிவயிற்றில் உருவெடுத்து, தொண்டைக்குள்ளேயே சமாதியானது புரிந்தது. இஷ்டத்துக்கு விரோதமாய், தானாய் ஆடிய உடம்பை, அப்படியே ஆடவிட்டார். அது என்னவோ தெரியவில்லை. கடந்த ஒரு மாதகாலமாக தூக்கத்தில் இருந்து, அவர் தூக்கியெறியப்படும் போதெல்லாம், அவர் இருதயம் தொட்டில் மாதிரி அங்குமிங்குமாய் ஆடுவது போன்ற உணர்வு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/225&oldid=558832" இலிருந்து மீள்விக்கப்பட்டது