பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 216

ஊடுருவ, சிரிப்பை விட்டு விட்டு, சீரழிந்து போனவர்போல், முகத்தை வைத்துக் கொண்டார். இதற்குள், கண்ணன், தன் கையில் இருந்த பத்திரிகைகளில் ஒன்றை பேராசிரியரிடம் நீட்டினார். அவர் அதிர்ந்துபோய், அதை வாங்க மறுத்தபோது, கண்ணன் சீரியஸாகவே பேசினார்.

"இது எங்கள் இயக்கம் நடத்துற போர்க்கதிர் என்கிற பத்திரிகை. தினப்பத்திரிகை. கடைகளில் தலைகீழாய் தொங்குகிற மேனா மினுக்கி பத்திரிகை மாதிரி, இதுக்கு விற்பனை கிடையாது. மொத்தம் பதினையாயிரம் பிரதிகள்தான் விற்குது. ஆனால் எங்களோட ஒவ்வொரு வாசகனும் ஒரு சிந்தனையாளன். ஒங்களைப் பற்றி ஒரு செய்தி போட்டோம். கொடுத்திட்டுப் போகலாமுன்னு வந்தேன். பதட்டப்படாதீங்க... ஒங்களைப் பற்றி உண்மையான செய்திதான் வந்திருக்கு."

பேராசிரியர், கண்ணனிடமிருந்து அந்தப் பத்திரிகையைப் பறித்துக் கொண்டார். அதைப் புரட்டப் போனவர், முதல் பக்கத்திலேயே, பேராசிரியர் பெருமாள்சாமியின் வீரப் போராட்டம் என்ற தலைப்பில், கிட்டத்தட்ட அரைப்பக்கம் படர்ந்திருந்த செய்தியைப் பார்த்தார். மடமடவென்று படிக்கப் போனபோது, மேகலாவும் தலையை நீட்டினாள். பேராசிரியர், கல்லூரியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டதில் இருந்து, வாடிக்கை பத்திரிகையின் உடந்தை, அப்பாவுவின் ஆணவம், இன்கம்டாக்ஸின் ஒத்துழைப்பு, கல்லூரி ஊழியர் ஒருவர் பெயரில் பெருமாள் சாமி பணம் போட்டிருப்பதாக ஜோடிக்கப்பட்ட குற்றம்-ஆகிய அனைத்தும் போடப்பட்டிருந்தன. இறுதியில், பேராசிரியர் பெருமாள்சாமி, தனித்து, தனிப்பட்ட கெளரவத்திற்காகப் போராடினாலும், இது ஒரு வர்க்கப் போராட்டத்தின் சாயலே. அஞ்சா நெஞ்சத்துடன் போராடும் இவருக்கு, ஒத்துழைப்பு வழங்கவேண்டியது, அனைவரது, குறிப்பாய் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்களுடைய கடமை என்று எழுதப்பட்டிருந்தது.

பேராசிரியருக்கு தன்னை நம்ப முடியவில்லை. மேகலாவைப் பார்க்க முடியவில்லை. அவள் அங்கே இல்லாதது போல், கோடு கோடாய்த் தெரிந்தாள். கண்ணன், கண்ணுக்குத் துப்புறவாய்த் தெரியவில்லை. அந்தப் பத்திரிகை மட்டும், ஆகாயமும் பூமியுமாய் ஆகிவிட்ட வானத்திரை போல் தோன்றியது. கண்கள், உச்சந்தலைக்குள் வந்துவிட்டது போன்ற உணர்வு. ஒரே ஆனந்தப் பரவசம் இடையே ஒரு சந்தேகம் ஒருவேளை தூக்கத்தில், தப்பித் தவறி, ஏதோ ஒரு சுகக்கனவு வந்திருக்கிறேதா என்பதுபோல், கண்களைக் கொட்டினார். இல்லை. இவர் கண்ணன். அவள், என் மகள். இது பத்திரிகை. அடேடே என்னைப் பற்றி நானே கூட இப்படி எழுத முடியாதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/228&oldid=558835" இலிருந்து மீள்விக்கப்பட்டது