பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 * சத்திய ஆவேசம்

"ஆமாம்மே ஆமாம். வாடிக்கை பத்திரிகைக்காரன் எவ்வளவு பெரிய மன்ஷன்? பேக்டரி மானேஜர்னா கிள்ளுக்கீரையா? அப்பாவுன்னா லேசா? பேசாமல் மகள்காரியை எழுதிக் கொடுக்கச் சொல்லாட்டி, என்ன நடக்குமோ அது நடந்ததுட்டு. ஆள் குளோஸ்.

“என்னய்யா நீ. நீயும் ஒரு ஏழைக்குப் பொறந்தவன்; இன்னொரு ஏழையை சாகடிக்கலாமாய்யா? இப்போ அவன் குடும்பம் என்ன பாடுபடும்? நெனச்சுப் பார்த்தியா?

"அதாம்மே மன்சு கேக்கல."

"யோவ் நடந்ததை அப்படியே சொல்லுய்யா. ஒனக்கும் பாரம் குறைஞ்சாப்புல இருக்கும். சொல்லு மாமா."

தங்கராசு, தலையில் கை வைத்தபடி, பொத்தென்று கீழே உட்கார்ந்தான். அவன் தலையை சாராயம் சுழற்றிக் கொண்டிருந்தது. திடீரென்று, ஏங்கி ஏங்கி அழுதான். "நானு கொல்லல்ம்மே. கொல்லவே இல்லமே." என்று கேவினான். "வேலையை விட்டுடப் போறேம்மே." என்று விடாப்பிடியாய் கத்தினான்.

மல்லிகா, அவன் கண்ணிரைத் துடைத்தாள். தங்கராசு, அவளை சுழன்று பார்த்தான். சுற்றிப் பார்த்தான். பிறகு, "நீ ஆதிபராசக்தி. ஒன்கிட்டே சொல்லாட்டி... என்னோட. நாவு அழுகிடும்மே” என்று அரற்றினான். பின்னர், அவன், இன்ஸ்பெக்டர் திம்மையாவின் வாடிக்கை நட்பையும், பேக்டரி தொடர்பையும், அப்பாவு என்பவனுடனான அந்தரங்க உறவையும் பின்னணியாய் சொன்னான். அப்புறம். 'எனக்கு சோறு வாண்டாமே.... கன்னையாவோட ரத்தவாடை குமட்டுது என்றான்."

மல்லிகா, நிலை குலைந்து எழுந்தாள். உடம்பெல்லாம் வேர்த்தது. கண்ணெல்லாம் எரிந்தது. அந்தச் சின்ன அறைக்குள், அங்குமிங்குமாய் நடமாடினாள். இந்தக் கொலைக்கு நானும் ஒரு காரணமாச்சே! நான் மட்டும் பெருமாள்சாமி கிட்டே அப்பவே நடந்ததைச் சொல்லி இருந்தால், அவரு, ஒரு வேளை காப்பாற்றியிருப்பாரே. ஆனா, நான் பொண்ணு. அதுவும் பாவப்பட்ட பொண்ணு. என்னால என்ன செய்யமுடியும். ஏன் முடியாது. முடியனும்.

மல்லிகா, மேற்கொண்டு யோசிக்கவில்லை. துங்கிப் போன தங்கராசுவைத் தட்டிப் பார்த்தாள். விழிக்கவில்லை. வெளியே வந்து, தெருக்கதவை வீட்டுக்காரி காதில் விழாதபடி மெல்லத் திறந்து, மெல்லச் சாத்தினாள். வீதிக்கு வந்தவளை, ஒரு வேன் மறித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/247&oldid=558854" இலிருந்து மீள்விக்கப்பட்டது