பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 - * சத்திய ஆவேசம்

சோகமான புன்முறுவல் பூக்க. அவர்களும் கரங்களை ஆட்டுவது போலிருந்தது. வாழ்க கோஷங்கள் வான்போல் முழங்கின.

பாதி வழியில், மரத்தின் வேரிலேயே இன்னமும் உட்கார்ந்திருந்த மேகலா, முத்தையா கோஷ்டியைப் பார்த்து, கையைத் தட்டி, அதிலி ருந்த மண்ணை உதறிவிட்டு, புடவையை இழுத்துவிட்டு, அவர்களை எதிர்கொண்டு அழைப்பதுபோல நடந்து, பின்னர் அவர்களோடு சேர்ந்து நடந்தாள். முத்தையாவும், அவன் தோழர்களும், அவளிடம் ஒருவர் மாறி ஒருவராக, நடந்த விவரங்களை ஒப்பித்தார்கள்.

எல்லா மாணவர்களும் வகுப்புகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். நாளைக்குப் போகலாம் என்பதுபோல், சிலர் வீடுகளுக்குப் பிய்த்துக் கொள்ளப் போனபோது, முத்தையாவும் மற்றும் பலரும் அவர்களை வழிமறித்து வழிப்படுத்தினார்கள். விசில் சத்தம், அணில் போல் முழங்க, தெம்மாங்குப் பாட்டோடு, டிவிஸ்ட் ஆட்டத்தோடு, மாணவர்கள் கும்பல் கும்பலாகப் போனார்கள்.

ஒரு மாத காலம் உருண்டோடியது.

கல்லூரி உருப்படியாக நடந்தது. பேராசிரியர் பெருமாள்சாமி, ரிவர்ஷனை எதிர்பார்த்து எதிர்பார்த்து, அப்புறம் அதை மறந்துவிட்ட சமயம் கல்லூரி அமைதியின் உருவகமாய் மாறியதில், அனைவருக்கும் மகிழ்ச்சி.

அன்று வெள்ளிக்கிழமை.

முத்தையா, வழக்கம்போல் கல்லூரிக்குள் நுழைந்தவன், திடுக்கிட்டான். மாணவர்களும், ஆசிரியர்களும். கும்பல் கும்பலாகக் கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். லைப்ரேரியன், நூலகத்தைத் திறக்காமல் வெளியே நின்றார். கல்லூரி பியூன்களில் சிலர், யார் யார், யார் யாருடன் பேசுகிறார்கள் என்பதை நோட்டம் பார்ப்பதுபோல், காக்கா மாதிரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருசிலர் கடுவன் பூனைபோல், கண்களை விட்டு விட்டு விழித்தார்கள்.

முத்தையாவைப் பார்த்ததும், ஒரு கும்பல் அவனருகே ஒடி வந்தது.

"நம்மோட பிரின்ஸ்பாலை, டிரஸ்ட் போர்ட் சஸ்பென்ட் செய்திருக்காம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/41&oldid=558645" இலிருந்து மீள்விக்கப்பட்டது