பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 30

கல்லூரி நிர்வாகச் சக்கரத்தில் காலூன்றியபடி அந்தச் சக்கரம் இயல்பாகச் சுழலப் போகும்போது ஒதுங்கிக் கொள்ளாமல், சக்கரத்தையே வக்கரமாக்கி ஆடிய அப்பாவுக் குழுவினர், ஆடி அடங்கி விட்டதாக நினைத்தபோது, முதல்வர் பெருமாள்சாமி சஸ்பென்டானது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சில நிமிடம் பேச முடியாத பேரதிர்ச்சியாக இருந்தது. நடந்ததை நம்ப முடியாதது போல், முத்தையா, தன் மோவாயை அழுத்திக் கொண்டிருந்தபோது, அடங்கி ஆடும் அப்பாவு, தன் அங்கிக்கார அரசியல்வாதியுடன் கல்லூரிக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.

அப்போது, யாருக்கோ இழவெடுப்பதுபோல் அல்லது அவரை வரவேற்பதுபோல், கல்லூரியின் மின்சார மணி ஒப்பாரியிட்டது. மாணவர்கள், வகுப்புகளுக்குப் போவதா வேண்டாமா என்பதுபோல் முத்தையாவைப் பார்த்தார்கள். பல ஆசிரியர்கள், மாணவர்களோடு சங்கமமாகி, மாணவரெது ஆசிரியரெது என்று கண்டுபிடிக்க முடியாதபடி நின்றார்கள். வகுப்பறைகளின் விளிம்புகளில் நின்ற ஒரு சில ஆசிரியர்கள், அப்பாவுவைப் பார்த்ததும் வகுப்புகளுக்குள் கிடந்த நாற்காலிகளுக்கு சொல்லிக் கொடுக்க ஓடினார்கள். லைப்ரேரியன், நூலகப் பூட்டை, அவசரத்தில் வேறு சாவியைப் போட்டுக் குடைந்தார். சிறுபான்மை எண்ணிக்கையுள்ள ஆசிரியர்கள் மாணவர்களை நோக்கி, "பெல் அடித்தாச்சுல்ல. ஒய் நாட் யூ கோ டு கிளாஸஸ் என்றார்கள். அப்பாவு புன்னகைக்கிறார். அதுபோதும், அதுக்காக எதுவும் செய்யலாம்.

அரசியல்வாதி உறுப்பினரின் அங்கி, வேறு புறத்தில் இருந்த தன் இடுப்பில் உரச, ஏதோ சேலை முந்தானை தொங்கிக் கொண்டிருப்பதுபோல் தோற்றம் காட்டிய அப்பாவு, அட்டகாசமான நடையுடன், கண்களைச் சுற்றவிட்டார். பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தில் தீவிரப் பங்கெடுத்து, பல சிறைச் சாலைகளைப் பார்த்த ஆசிரியர்கள், அங்கே நிற்பதைப் பார்த்தார். மாணவர் சங்கத்தின் தலைவர்களைப் பார்த்தார். கோணிக்காரன் மகன் முத்தையாவைப் பார்த்தார். மெளனமாக இருப்பது என்ற மயான வைராக்கியத்தை உடைத்தபடியே, ஏதோ பேசப் போனார். அப்போது அவரைப் பார்த்து பல்லிளித்த கோ டு கிளாஸஸ் ஆசிரியர்களால் உற்சாகப்பட்டு, சொல் விரிக்கத் துவங்கினார்.

"எந்த ஆசிரியராவது இன்னும் ரெண்டு நிமிடத்துல கிளாஸுக்குப் போகாட்டால், அப்புறம் என்மேல வருத்தப்படக் கூடாது. நான், ரவுடிக்கு ரவுடி. கேடிக்குக் கேடி. பொறுக்கிக்குப் பொறுக்கி"

படித்தவனுக்குப் படித்தவன் என்று சொல்ல முடியாத அப்பளவு, கல்லூரி அலுவலகத்தை நோக்கி விரைந்தபடியே, தன் சொல்லுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/42&oldid=558646" இலிருந்து மீள்விக்கப்பட்டது