பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 32

நான்கைந்து முடிநீண்ட மாணவப் பேர்வழிகளோடு கூட்டத்தை வழிமறிப்பதுபோல், பிரபு முன்னால் வந்து நின்றான். எங்கிருந்து வந்தான் என்பது, அந்த அமளியில் எவருக்கும் தெரியாது. முத்தையாவைப் பார்த்து வேதம் ஒதினான்.

"முத்தையா, நாம் இந்தச் சந்தர்ப்பத்துல போராட்டத்தை துவக்குறது எனக்கு நல்லதாப் படல. பிரின்ஸ்பால் சஸ்பென்ட் ஆகியிருக்கார். சஸ்பென்ஷன் ஒரு தண்டனை இல்லே. இனிமேல்தான், அவர்மேல் சார்ஜஸ் பிரேம் பண்ணுவாங்க. இந்தக் கட்டத்துல நாம் போராடினால், பேராசிரியர். பெருமாள்சாமி, மாணவர்களைத் தூண்டிவிட்டு, ரகளை செய்தார்னு இன்னொரு குற்றச்சாட்டையும் அபாண்டமாய் சுமத்துவாங்க. நம் பிரின்ஸ்பாலை நாமே காட்டிக் கொடுப்பதாய் ஆகிடும். அதோட, நம்மோட போராட்டத்தால், பிரின்ஸ்பாலுக்கு சிம்பதெட்டிக்காய் இருக்கக்கூடிய யூனிவர்சிட்டி சிண்டிகேட்டும், கவர்மென்டும் அவர்மேல கோபப்படலாம். யாருக்காக நாம் போராடுறோமோ, அவரோட நன்மையையும் நாம் கவனிக்கனும் நல்லா யோசித்துப் போராடனும்’

பிரபு, சொல்வதில் நியாயம் இருக்குமோ என்பதுபோல், ஒரு சில மாணவத் தலைவர்கள் நிதானித்தார்கள். அணிவகுப்பின் அடியில் இருந்த மாணவர்களுக்கு பிரபு பேசியது காதில் விழவில்லை. எவண்டா இவன். பூனை மாதிரி குறுக்கே. என்று கத்தினார்கள். அந்தக் கத்தலில் சக்தியெடுத்தவன்போல், முத்தையா, ஆணித்தரமாகப் பேசினான்.

"எந்தப் போராட்டத்தையும் யோசித்து நடத்த வேண்டியதுதான். ஆனால், யோசனையே ஒரு போராட்டமாகி விடக்கூடாது. கண்முன்னால் நடந்த அக்கிரமத்தைக் கண்டிக்காமல், கண்ணை முடிக்கொண்டு யோசிப்பது கண்மூடித்தனம். நாம் போராடப் போவது, நம் சக்தி மீதும், நீதியின் மீதும் நம்பிக்கை வைத்துத்தான். சிண்டிகேட்டின் இன்டிமேஷனைப் பற்றியோ, அரசாங்கத்தின் தயவைப் பற்றியோ கவலைப்படக்கூடாது. சரி நீயும் இந்தப் பக்கம் வா. நியாயம் வெளிப்படும் வரை, அப்பாவு வெளிப்பட முடியாமல் செய்வோம்:

கூட்டம் லேசாக நகரப்போனது. பிரபுவும் நகர்ந்து கொண்டே பேசினான்.

"இந்த முடிவுக்கு முடிவு கட்டவேண்டியது என்னோட கடமை. இதே இந்தப் பேராசிரியர். பெருமாள்சாமி, மாணவர்களைப் போலீஸில் பிடித்துக் கொடுத்தவர். அவங்க போலீஸ்ல அடிபடும்போது, சுழல் நாற்காலியில் இருந்து தாளலயத்தோடு சுற்றியவர். பல மாணவர்களை எக்ஸ்பெல் செய்து டென்ஷன் கொடுத்தவர். டிரஸ்ட் போர்ட் அக்கிரமங்களுக்கு எல்லாம் ஐடியா கொடுத்தவர்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/44&oldid=558648" இலிருந்து மீள்விக்கப்பட்டது