பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 82

பார்க்க விரும்பல; ஒங்களையும் பார்த்துட்டுப் போகவந்தோம். கால் எப்டிங்க இருக்கு?

அருணாசலம், அவர்களை அன்பு கனியப் பார்த்தார். ஏதோ பேசப் போனார். அவர் பேசி, அவரிடம் எஞ்சி நிற்கிற சக்தியும் இளைத்துவிடக்கூடாது என்பதுபோல், அன்னம்மா ஒப்பித்தாள்:

"ஆஸ்பத்திரியில கட்டுப் போட்டாங்க. அப்படியும் வலி போகல. யார் யாருல்லாமோ சொன்ன பிறகு, போட்டோ எடுத்தாங்க முட்டில இருக்கிற சிப்பி எலும்பு மேல வந்துட்டுன்னு சொன்னாங்க. அப்புறம் ஆபரேஷன் பண்ணுனாங்க. அதுக்குப் பிறகும் வலி போகல. ஆனாலும், வீட்டுக்குப் போகச் சொன்னாங்க முத்தையா, யார் கிட்டல்லாமோ கெஞ்சி, கூத்தாடிப் பார்த்தான். அதனால இன்னொரு போட்டோ எடுத்தாங்க. அப்போதான் சிப்பி எலும்புல லேசா கீறல் விழுந்திருக்கது தெரிஞ்சுது. ஆபரேஷன் பண்ணுன கால, பழையபடியும் அறுத்து, பிரித்து எலும்ப தைச்சாங்க. இப்போ தேவல. ஆனால், நடக்கதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகுமாம். இப்போதான் காலையும் லேசாய் நீட்டிமுடியுது"

கிருஷ்ணன், தன் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டான். அந்த ஒண்டிக் குடித்தன அறையை ஒட்டு மொத்தமாக நோட்டம் விட்டான். நான்கைந்து கிழிந்த புடவைகள், பழைய பாயோடு சுற்றி வைக்கப்பட்டிருந்தது. ஸ்டவ் அடுப்பு, மண்ணெண்ணெய் கறை அதிகமாகப் படாமல் மின்னியது. பழைய டிரங்க் பெட்டி ஒன்றும் கட்டிலுக்குக் கீழே இருப்பதைப் பார்த்தான். சிறிது நேரம், அந்தக் குடும்பத்தின் சோகத்தை துக்கித்த மெளனத்தில் கரைந்த கோபால்ராஜ், "முத்தையா எப்போ வருவான். வருவார்..? என்றான்.

அன்னம்மா, அவர்களிடம் ஒப்பிக்க வேண்டும் போலிருந்தது:

"காலையில போனான். எப்போ வருவானோ சொல்ல முடியாது. திடீர்னு வருவான். திடுதிப்புன்னு போவான். இவ்வளவுக்கும் இன்னிக்கி

எதுக்குப்பா? பிரின்ஸ்பால காலேஜ்ல நீக்கிட்டாங்களாம். தப்புத்தான். ஆனால், இவனால என்ன பண்ண முடியும்.? நம்ம சக்திக்கு மீறுன விவகாரம். அதுவும் அப்பா இந்த நிலைமையில் இருக்கையில், அவனுக்கு எதுக்கு ஊர் வேல? கொஞ்சம் புத்தி சொல்லுங்கப்பா..."

அருணாசலத்திற்கு, மனைவியின் பேச்சு பிடிக்கவில்லை என்பதை முகச்சுழிப்பாய்க் காட்டினார். பிறகு,"என்ன பேசிக்கிட்டே இருக்கே? வந்தவங்களுக்கு ஒரு டீ போட்டுக்கொடு." என்றார். அன்னம்மா, கைகளைப் பிசைந்தபோது, அவரும் புரிந்தவர்போல் தலையைத் தாழ்த்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/94&oldid=558702" இலிருந்து மீள்விக்கப்பட்டது