பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 * சத்திய ஆவேசம்

"பாவம். வாங்கிட்டு வந்தவங்களுக்கு ஒரு பழம்கூட கொடுக்க மறந்துட்டேன்" என்றாள். அன்னம்மா. பிறகு, ஒரு ஆரஞ்ச் பழத்தை எடுத்து, உரித்து, கணவரின் வாயில் வைக்கப் போனாள். அவர், அதை சுவைக்காமல், துப்பி, சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டார்.

எல்லோரும், இந்த விவகாரத்தின் துப்பை, முத்தையாதான் துலக்கவேண்டும் என்பதுபோல், அவன் வருவது வரைக்கும், எதையும் தொடுவதில்லை என்று, ஒருவரிடம் ஒருவர் விவாதிக்காமலே ஏகமனதாகத் தீர்மானித்தார்கள்.

- சிறிது நேரத்தில், முத்தையா வந்தான். தரையில் படர்ந்து கிடந்த பழங்களையும், ரூபாய் நோட்டுக்களையும் பார்த்துவிட்டு, அங்கிருந்த எல்லோரையும் மாறி மாறிப் பார்த்தான். கமலசுந்தரியும், சுகந்தியும் அண்ணனிடம் நடந்ததை மாறி மாறி விளக்கினார்கள். முத்தையா புரிந்து கொண்டான். டுப்ளிகேட் முத்தையா, தனது தியாகத்தைப் புரிந்து கொள்ளவில்லை. மாறாக விலைபேச வந்திருக்கிறான் நினைக்க நினைக்க, அவனுக்குப் பற்றி எரிந்தது. பலமாகத்தான் கத்தினான்:

"யாராவது எதையாவது கொடுத்தால், உடனே வாங்கிடுறதா? நம்மகிட்ட இருக்கிற சொத்து மானம் ஒண்ணுதான். அதையும் விட்டுடுறதா?”

முத்தையா, இப்படிக் கத்திப் பார்த்ததை அறியாத தந்தை, மகனை மெளனமாகப் பார்த்தார். அவர் உதடுகள் துடித்தன. வாய்க்கு மீறும் வார்த்தைகளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருந்தார். அன்னம்மா, வழக்கம்போல் கைகளைப் பிசைந்தாள். அப்பாவின் மெளனம் கோபத்தையும், அவர் உள்ளுறத் துடிப்பதையும் பார்த்த சுகந்தியால் தாளமுடியவில்லை. இதுவரை, அண்ணனிடம் நேருக்கு நேராய் அதிகம் பேசியறியாத அவள், எதிர் கத்தல் போட்டாள்.

"ஒனக்குத்தான் மானம் இருக்கது மாதிரி குதிக்காதண்ணா. ஒன்னோட பழகுனவங்க மாதிரி பேசுனாங்க. நாங்க ரெண்டு பேரும் சந்தேகப்பட்டுக்கிட்டுத்தான் இருந்தோம். இந்தப் பழத்துல ஒரு சுளையைக்கூட அப்பா தின்னல. இந்தா இந்தப் பழத்தையும், அந்த இருநூறு ருபாயையும் எடுத்து அவங்க முஞ்சில எறிஞ்சிட்டு வா. எங்களுக்கு பணத்தப் பார்த்துப் பழக்கமில்ல; ஆனால், பட்டினி கிடந்து பழக்கம் இருக்கு விவரம் தெரியாம ரொம்பத்தான் பேசுறே. நீ மட்டும் குடும்ப நெல்ம தெரிஞ்சிருந்தால், அந்த பிரின்ஸ்பால் பின்னால இப்டி சுத்துவியா? அவர்பாடு... காலேஜ்பாடு. நீ அவருக்காக சுத்தும்போது, அம்மா... எங்க வயித்துக்காக எங்கெல்லாம் சுத்துறாங்கன்னு ஒனக்குத் தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/97&oldid=558705" இலிருந்து மீள்விக்கப்பட்டது