பக்கம்:சத்திய ஆவேசம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சு.சமுத்திரம் 86

சுகந்தி, சொல்லி முடித்துவிட்டு விம்மினாள். கமலசுந்தரி, அவளை அணைத்துக் கொண்டாள். தந்தை, எதுவுமே பேசாமல், கூரையைப் பார்த்தார். முத்தையா, அதிர்ந்து போனான். அந்த அதிர்ச்சியை, இன்னொரு அதிர்ச்சி லேசாக்குவதுபோல், வாசல் முனையில் மேகலா நின்று கொண்டிருந்தாள்.

தங்கை பேசியது அவள் காதில் விழுந்திருக்குமோ? அதனால்தான் இப்படிக் கலக்கமாக நிற்கிறாளோ?

முத்தையா, தங்கை சுகந்தியை மருட்சியோடும் அனுதாபத்திற் குரியவள்போல் வாசலுக்கு வெளியே நின்ற மேகலாவை அதிர்ச்சியோடும் மாறி மாறிப் பார்த்தான். நடந்ததை மாற்றமுடியாத இயலாமைத் தவிப்போடும், கொதிப்போடும் பார்த்தான். மேகலாவுக்கு, தங்கை பேசியது கேட்டிருக்கும் என்று அவன் நினைக்க நினைக்க அவன் காதுகள் பஞ்சராகிக் கொண்டிருக்கும் சைக்கிள் டியூப்கள்போல் இரைந்தன. அவளுக்கும், தனக்கும் தொடர்பு அற்றுப்போகப் போகிறது என்ற அச்ச உணர்வுடன், அவன் அல்லாடியபோது, வீட்டிற்குள் நிசப்தம் நிலவியது.

வேறொரு சமயமாக இருந்திருந்தால், சுகந்தி பேசிய பேச்சுக்கு-மகனின் மனதை நோகடித்த செயலுக்கு அன்னம்மா, மகளை அடித்திருப்பாள். தந்தையும், ஒரு அக்னிப் பார்வையை வீசியிருப்பார். குறைந்த பட்சம், கமலசுந்தரியாவது ஒரு அதட்டுப் போட்டிருப்பாள். ஆனால், அப்போது எல்லோரும் மெளன சோகங்களாய், முகம் காட்டினார்கள். சுகந்தி, அண்ணனைச் சாடியதை அங்கீகரிப்பதுபோன்ற மெளனம்.

முத்தையா, மேகலாவை வாங்க என்றுதான் கூப்பிடப் போனான். அப்படிப் பேசி விட்டதாகக்கூட நினைத்தான். மேகலாவிற்கு, அது கேட்டதோ இல்லையோ, அளவெடுத்து நடப்பவள்போல் அடியெடுத்தாள். சோகத்தில் தேய்ந்து, அது ஒன்றையே சுரணையாகக் கொண்டவள்போல், உள்ளே வந்து, வீட்டுக்குரியவர்களை என்னை வாம்மான்னு கேளுங்களேன் என்பது மாதிரிப் பார்த்தாள். இதற்குள், அவர்களும் சுதாரித்து விட்டார்கள். கண்ணைக் கசக்கிய சுகந்தி, கைகளைக் கசக்கினாள். மகன் மாறிவிட்டான் என்பதுபோல், தலையைக் கவிழ்த்து, கோபத்தை குப்புறப்படுத்திக் கொண்டிருந்த அருணாசலம், சட்டென்று நிமிர்ந்து தன் உணர்வை மாற்றிக் கொண்டவர்போல் அவளை கண்ணகலப் பார்த்தார். அவர் உதடுகளில் கீறல் விழுந்தது.

முத்தையாவுக்கும், லேசாக உற்சாகம். தங்கை சொன்னது அவளுக்குக் கேட்டிருக்காது என்ற நெகட்டிவ் மகிழ்ச்சி, சமாளித்துப் பேசினான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_ஆவேசம்.pdf/98&oldid=558706" இலிருந்து மீள்விக்கப்பட்டது