பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சத்திய வெள்ளம்

தெரிந்தோ தெரியாமலோ இதை எழுதியவன் உன்னையும் என்னையும் மிக நெருக்கமாகச் சம்பந்தப்படுத்தித்தான் இப்படி எல்லாம் எழுதியிருக்கிறான். நம்முடைய காதலின் அந்தரங்கத்தை நம்மைவிட அதிகமாகத் தெரிந்து ஒப்புக் கொண்டு அச்சடித்து அங்கீகரித்த ஒரு காரணத்துக்காக அவனுக்கு நன்றி கூறுவதை விட்டு விட்டு நீ ஏன் இதற் காகக் கண்கலங்குகிறாய்?” என்று பாண்டியன் கேட்ட பின்புதான் அவள் முகத்தின் இருள் மாறிச் சுபாவமான தன்மையுடன் சிரிப்பு மலர்ந்தது.

எட்டாவது அத்தியாயம்

கிண்ணுக்கினியாள் கொண்டு வந்து காட்டிய துண்டுப் பிரசுரத்தைக் கண்டு பாண்டியன் அதிர்ச்சி அடையவில்லை. அவன் அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டான்: “இதை ஒரு பெரிய விஷயம் என்று நினைத்துப் பொருட்படுத்தி என்னிடம் காண்பிக்க வந்திருக்கிறாயே; இப்போது உன்மேல்தான் கோபம் வருகிறது எனக்கு.”

“இதைப் பார்த்து உங்களுக்கு என்ன தோன்றுமோ, எப்படி நினைப்பீர்களோ என்று எனக்கே பயமாக இருந்தது. அதுதான்.”

“நல்ல பயம்தான். போ...” என்று கேலி செய்து விட்டு வராந்தாவின் பக்கமாகப் போயிருந்த அண்ணாச்சியையும் மணவாளனையும் கூப்பிட்டுக் குரல் கொடுத்தான் பாண்டியன். அவர்கள் உள்ளே வந்ததும் அவர்களிடமும் அந்தத்துண்டுப் பிரசுரத்தைப் பற்றிச் சொல்லிச் சிரித்தான் அவன். கண்ணுக்கினியாளின் அநாவசியமான பயத்தைப் பற்றியும் சொல்லி நகைத்தான். அதைக் கேட்டு மணவாளன் சொன்னார்: - - .

“நல்லவர்களின் நாணமும், அச்சமும்தான் இன்றைக்கு நம்மைச் சுற்றிலும் இருக்கும் தீயவர்களின் மிகப் பெரிய வாய்ப்பு அம்மா! நல்லவர்கள் நாணப்பட்டு ஒரு நேரிய