பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சத்திய வெள்ளம்

“என்னங்க ? நான்தான் கோட்டச் செயலாளர் குருசாமி பேசறேன். நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குங்களா?. கவனிச்சிங்களா?”

பலதுறை அறிவின் ஆலயமாகிய ஒரு பெரிய பல்கலைக் கழகத் துணைவேந்தரிடம் சாதாரண முகமன் வார்த்தைகளோ, உபசாரமான மரியாதைகளோ, வணக்கமோகூட இல்லாமல் ஏதோ தன் கட்சிக்குக் கொடி கட்டப் போகிறவனையோ, சுவரொட்டி ஒட்டப் போகிறவனையோ கூப்பிட்டுப் பேசுவது போல் தடித் தனமாக அவன் பேசியவிதம் அவருக்கு ஆத்திரம் ஊட்டினாலும் பொறுமையாகப் பதில் சொல்ல வேண்டி யிருந்தது. அவன் மேல் ஆத்திரப்பட்டுவிடுவதால் தமக்கு அவன் என்னென்ன கெடுதல்களைச் செய்ய முடியும் என்ற முன்னெச்சரிக்கை அவரை அஞ்சி அடங்கச் செய்திருந்தது. ஒரு மேலதிகாரிக்குப் பதில்கள் சொல்லும் குமாஸ்தாவைப்போல் அந்தக் கோட்டச் செயலாளருக்குத் துணை வேந்தர் ஃபோனில் பதில்கள் சொல்ல வேண்டியி ருந்தது. ஏற்கெனவே அந்த ஆள் செய்த நிர்ப்பந்தம் பொறுக்க முடியாமல் போலீசுக்கு ஃபோன் செய்து அதனால் மாணவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேர்ந்தது ஞாபகம் வந்தது அவருக்கு. பட்டும் படாமலும் பேசி முடித்து ஃபோனை வைத்தார் துணைவேந்தர். எதிரே சுவரில் மிகப் பெரிய சில்க் துணியில் வரையப் பெற்றுத் தொங்கவிடப் பெற்றிருந்தது பல்கலைக் கழகச் சின்னம். இருபுறமும் யாளிச் சிற்பமும் நடுவில் பசுந்தளிரும் கீழே குத்துவிளக்கும் அதன் அடியில் ‘வித் ட்ரூத் அண்ட் விஸ்டம் என்ற ஆங்கிலக் கொள்கை வாசகமும் அடங்கிய காட்சி தெரிந்தது. அதற்கும் கீழே பழைய துணைவேந்தர் காலத்தில் எழுதப்பட்ட, ‘தி யுனிவர்ஸிடி எஜுகேட்ஸ் தி இண்டலக்ட்டு ரீஸன் வெல் இன் ஆல் மேட்டர்ஸ், டு ரீச் அவுட் டுவார்ட்ஸ் ட்ரூத் அண்ட் டு க்ராஸ்ப் இட் என்ற இலட்சிய வாக்கியமும் தெரிந்தது. சத்தியத்தை அடையவும் கிரகிக்கவும் என்ற அந்த வாக்கியப் பகுதியைத் தம்