பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 193

இருந்தார்கள். ஒரு கூட்டம் சுற்றி நின்று பார்த்துக் கொண் டிருந்தது. உண்ணாவிரதக் கொட்டகைகளின் முகப்புக் களிலும், மேற்புறமும் கோரிக்கை வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. உண்ணாவிரதம் இருக்கிறவர்களுக் குப் பார்க்க வந்தவர்கள் அணிவித்த மாலைகள் பக்கத்தில் குவிந்திருந்தன. சில மாணவ மாணவிகள் அருகே படிப் பதற்குப் புத்தகங்கள் வைத்துக் கொண்ருந்தார்கள், சிலர் அந்த அதிகாலையிலேயே படித்துக் கொண்டும் இருந்தார்கள். சிலர் சோர்ந்து போய்ப் படுத்துக் கொண்டிருந்தார்கள்.

கதிரேசன் பார்க்கச் சென்றபோது பாண்டியன் படித்துக் கொண்டிருந்தான். மோகன்தாஸ் சோர்ந்து போய்த் தலையணையில் சாய்ந்திருந்தான். கிராமத்தில் தெரிந்து கொண்டு வந்த விவரங்களையும், மேரி தங்கத்தின் பெற்றோரைச் சந்தித்ததையும், டிரில் மாஸ்டர் பிச்சை முத்து மூலம் அறிந்த உண்மைகளையும் விளக்கமாகப் பாண்டியன், மோகன்தாஸ் இவரிடமும் விவரித்தான் கதிரேசன்.

“மேரி தங்கத்தின் தந்தையான சற்குணம் நம்மோடு ஒத்துழைத்தாலும், ஒத்துழைக்காவிட்டாலும் நாம் உண்மைக்காகத் தொடர்ந்து போராட வேண்டும். இந்த விஷயத்தில் நியாயம் கிடைக்கிறவரை நமது போராட்டம் நிற்காது” என்றான் பாண்டியன்.

“நிறையப் பணத்தைக் கொடுத்து. மிரட்டி மிஸ்டர் சற்குணத்தின் வாயை அடக்கி விட்டார்கள் என்றால் இனி அவரை நம்பிப் பயனில்லை” என்றான் மோகன் தாஸ். - அப்போது மல்லிகைப் பந்தல் நகர மாதர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும் மாலை சூட்டி ஆதரவு தெரிவிப்பதற் காக மாதர் சங்கத் தலைவியும், காரியதரிசியும், மற்றவர் களும் ஒரு காரில் வந்து இறங்கினார்கள். முதலில் கண்ணுக்கினியாள் முதலிய மாணவிகளுக்கு மாலை சூட்டிவிட்டு அப்புறம் மாணவர்கள் அமர்ந்திருந்த

ச.வெ-13