பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 சத்திய வெள்ாம்

பெருக்கு எடுக்கும்போது எல்லாப் பொய்களையும் அது இருந்த இடம் தெரியாமல் அடித்துக் கொண்டு போய் அழித்துவிடும். பல ஆண்டுகளுக்குமுன் இங்கே பெருகிய முதற் சத்தியப் பெருக்கைக் காந்தியடிகள் ஊற்றுக் கண்ணாயிருந்து பெருகச் செய்தார். அதில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய குறுகிய மாநில உணர்வுகள் கரைந்து ஹரிஜன், மேலோன் என்ற பேதங்கள் தவிர்த்து ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் தகர்ந்து ஏக இந்தியாவும் விடுதலை பெற வேண்டும் என்ற வேகம் மட்டுமே நீரோட்டத்தின் இயக்கமாயிருந்தது. அதுபோல் மீண்டும் ஒரே திசையில் முனைந்து ஒடும் உண்மைப் பெருக்கு ஒன்றில்தான் இப்போதுள்ள பொய்களைக் கரைக்க முடியும்.”

மணவாளனின் தெளிவான கருத்து பாண்டியனை மெய் சிலிர்க்க வைத்தது. மறுநாள் அதிகாலையில் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டபோது மணவாளனே வந்து அவனை வழியனுப்பினார். பதினொன்றரை மணிக்கு அவன் மல்லி கைப் பந்தலை அடைந்தபோது பகலே இருட்டி மூட்டம் போட்டாற்போல் கவிழ்ந்திருந்தது. அவன் அந்தப் பஸ்ஸில் தான் வரமுடியும் என்று எதிர்பார்த்துக் கதிரேசனும் பத்திருபது மாணவ நண்பர்களும் அவனை வரவேற்கப் பஸ் நிலையத்துக்கு வந்திருந்தனர். மல்லிகைப் பந்தல் மண்ணில் இறங்கியதும் இறங்காததுமாக ஒரு போராட்டப் பிரச்சனையோடு பாண்டியனை எதிர் கொண்டார்கள் அவர்கள். தங்களோடு பாலேஸ்வரி என்ற யாழ்ப்பாணத்து மாணவியையும் அவர்கள் பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்திருந்தார்கள். பல்கலைக் கழகத்தில் படிக்கும் வெளி நாட்டு மாணவிகளில் அவன் குறிப்பிடத்தக்கவள் என்ற முறையில் அவளை இரண்டொருமுறை கண்ணுக்கினி யாளுடன் பார்த்திருக்கிறான் பாண்டியன். அவள் சம்பந்த மாக ஏதோ பிரச்னை அன்று அங்கே காத்திருக்கிறது என்பது மட்டும் பாண்டியனுக்கு அப்போது உடனே புரிந்தது. -