பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சத்திய வெள்ளம்

மூலமாகவே அதை வாழச் செய்ய முடியும் என்ற புதிய மனப்பான்மை இப்போது அவனுள் வந்திருந்தது. வளராத எதுவும் வாழாது என்றும், ஒன்றை வாழ வைப்பதற்கு அது வாழ்க என்று எழுதிவிடுவது மட்டும் போதாது என்றும், கல்லூரி வாழ்வு அவனுக்குக் கற்பித்திருந்தது. வாழ்க, ஒழிக கோஷங்கள் பற்றிய பள்ளிக்கூட நாட்களின் மனப் போக்கும் இப்போது அவனிடம் இல்லை. இந்தச் சில ஆண்டுகளில் நிறைய நூல்களையும், உலக அனுபவத்தை யும் அவன் கற்றிருந்தான். புதிய அறிவுகளின் உயரத்தில் நின்று கீழே திரும்பிப் பார்த்த போது பழைய அறியாமை களின் இருண்ட பள்ளம் தெளிவாகத் தெரிந்தது. பள்ளி இறுதி நாட்களிலும், அதை ஒட்டிய காலத்திலும் எதுகை மோனையோடு பேசுவது, எழுதுவதில் அவனுக்கு ஒரு வெறியே இருந்தது. அப்படிப் பேசிய சில தலைவர்களை அவன் இமிடேட் செய்து அப்படியே பேசப் பழகியும் இருந்தான். .

“தகுதியும் மிகுதியும் வாய்ந்த தலைமையாசிரியர் அவர்களே! கூட்டத்தின் ஒரு பகுதியாக அமர்ந்திருக்கும் ஆன்று அமைந்து அடங்கிய ஆசிரியப் பெருமக்களே!” என்றெல்லாம்தான் அப்போது பேசத் தொடங்குவான் அவன். கருத்துக்களை வற்புறுத்தும் பதங்களைவிடப் பதங் களை வற்புறுத்திக் கருத்துக்களை அவற்றில் கரையவிடும் பழக்கமே அப்போது அவனிடமும் மற்றவர்களிடமும் இருந்தது. தவை அடுத்து த வரவும், ஆவை அடுத்து ‘ஆ’ வரவும் ஏற்ற பதங்களைத் தேடியே பேசிப் பழக்கமாகி யிருந்தது. கல்லத்தி மரத்தில் இலைகளிலும், கிளைகளிலும் காய்கள் அப்பிக் கொண்டிருக்கிற மாதிரி வேண்டிய இடங்களில் விவேகத்தோடு அமையாத சொற்களை இட்டு நிரப்பும் அந்த வெறி இப்போதுதான் தணிந்திருந்தது. அந்த மாறுதல் தனக்கு மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றி உள்ள பல மாணவர்களிடமும் நேர்ந்திருப்பதைப் பாண்டியன் கவனித்திருந்தான். இது ஒரு டிரான்ஸிஷன் பீரியட்’ என்பது அவனுக்குப் புரிந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சத்திய_வெள்ளம்.pdf/30&oldid=609494" இலிருந்து மீள்விக்கப்பட்டது