பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 437

“உயரத்திலிருந்து பார்த்தால் எதுவுமே அழகாகத் தெரிகிறது.”

“ஆனால் சிலரால் உயரத்தில் வந்தும் அழகைப் பார்க்கவே முடியவில்லை. உயரத்தில் வந்தும் அடுத்தவர் களுக்கு இடையூறாக இருக்கிறார்கள் சிலர்” என்று அருகே ஏறி வந்து கொண்டிருந்த நாலைந்து பேரை அவளிடம் சுட்டிக்காட்டிக் குறும்பு நகை புரிந்தான் அவன்.

முப்பத்து ஆறாவது அத்தியாயம்

அவர்கள் எல்லாரும் வண்டியூர் மாரியம்மன் கோவிலிலிருந்து திரும்பும்போது பகல் ஒன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. மணவாளன் வீட்டில் பகல் உணவுக் குத் திரும்பி வருவதாகச் சொல்லியிருந்தும் பாண்டியனால் அங்கே போக முடியவில்லை. நாயுடுவும் கண்ணுக் கினியாளும் அவள் தாயும் வற்புறுத்தி அவனைத் தங்கள் வீட்டிலேயே சாப்பிடச் செய்து விட்டார்கள். சாப்பிட்டு முடிந்தவுடன் கூட நாயுடு அவனை உடனே போக விடவில்லை. சிறிது நேரம் இருக்கச் சொன்னார்.

“இப்போ என்ன அவசரம் அப்படி? உண்ட வீட்டில் இரண்டு நிமிஷம் உட்காராமல் போகக்கூடாதும்பாங்க. இரு. போகலாம்” என்றார் அவர். அவனாலும் மறுக்க முடியவில்லை.

பகல் இரண்டரை மணி பஸ்ஸில் ஊருக்குப் புறப்பட எண்ணியிருந்த அவன் சித்திரக்காரத் தெருவில் கண்ணுக் கினியாளின் வீட்டிலிருந்து புறப்படும்போதே இரண்டரை மணி ஆகிவிட்டது. அவன் மணவாளனின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது அங்கே மணவாளனின் உறவினரும் ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும் ஆகிய ஒருவர் வந்தி ருந்தார். அந்த முதியவருக்குப் பாண்டியனை அறிமுகம் செய்து வைத்தார் மணவாளன். இளைஞர் இயக்கங்கள், மாணவர்கள் போராட்டங்கள் பற்றித் தம்முடைய கருத்தை அந்த முதியவர் மனம் திறந்து கூறினார். முதிய வரானாலும் அவர் மனம் இளமையாக இருந்தது.