பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 443

“...தேவர் உங்களிடம் டிரங்காலில் என்ன சொன்னா ரென்று எனக்குத் தெரியாது. நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அவரும் உங்களோடு ஃபோனில் பேசியதை என்னிடம் சொல்லவில்லை. நீங்கள் வரப் போகிறீர்கள், சந்திக்க வேண்டும் என்று மட்டும்தான் என்னிடம் சொன்னார்.”

“பரவாயில்லை! மற்றதை நேரில் சொல்லத்தான் இப்போது நானே வந்துவிட்டேனே. தேவர் எங்கள் அணியில் இருக்கிறார். அவர் எங்கள் அன்புக்குரியவர். அவருக்குப் பக்கத்து வீட்டுக்காரரின் புதல்வராகிய நீங்களும் எங்கள் அன்புக்குரியவர். உங்களை மிகவும் நம்பிக்கைக்குரியவராக நாங்கள் கருதுகிறோம்.”

“அப்படிக் கருதாவிட்டாலும் நான் அதற்காக வருந்த மாட்டேன்.”

“அவசரப்படாதே தம்பீ! ஐயா சொல்றதைப் பொறுமையாகக் கேட்டுக்க” என்று சன்னாசித் தேவர் குறுக்கிட்டார். அவன் அந்தப் பிரமுகரது முகத்தை முறித்தாற் போலப் பேசத் தொடங்கியது தேவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது. -

“மாணவர் போராட்டம் அது இதுன்னு நீங்க தீவிரமாயிருக்கிறதனாலே உங்க எதிர்காலம் பாதிக்கப் படுகிறது உங்களுக்குத் தெரியுமா? நீங்க கொஞ்சம் நடுநிலையா விலகி இருக்கணும். அதனாலே உங்களுக்கு அதிக நன்மை உண்டு.” - “எது நடுநிலை? நன்மைக்கும் தீமைக்கும் நடக்கிற போரில் இரண்டிற்கும் நடுவே நிற்பது நடுநிலைமை இல்லை. அது கையாலாகாத்தனம், தீமையைச் சாராமல் நன்மையின் பக்கம் சார்ந்து நிற்பதே நடுநிலை. இன்று இந்த நாட்டில் நடுநிலை என்ற பதமே பிழையான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. போர்க்களங்களில் நடுநிலைக்கு இடமே இல்லை. தீயவர்களை எதிர்க்கும் போரில் நல்லவர்கள் பக்கம் நிற்பதுதான் நடுநிலை.