பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 சத்திய வெள்ளம்

சார் வீட்டு முன் உள்ள இரகசியப் போலீஸ் எல்லாமே துணைவேந்தர் யோசனையின் பேரில்தான் என்பது பாண்டியனுக்கு புரிந்தபோது அவன் கோபம் அதிகமா யிற்று.

முப்பத்து எட்டாவது அத்தியாயம்

பாண்டியன் முதலியவர்கள் துணைவேந்தரைச் சந்தித்துப் பேசிய இரவுக்குப் பின் எதிர்பார்த்த மாறுதல் ஏற்பட்டது. ரிமாண்டில் வைக்கப்பட்டிருந்த அண்ணாச்சி, மணவாளன், தேசியத் தோட்டத் தொழிற் சங்கத்தின் செயலாளர் ஆகிய மூவரையும் போலீஸ் நிபந்தனையின்றி விடுதலை செய்துவிட்டது. அவர்களை விடுவிப்பார்களோ மாட்டார்களோ என்ற சந்தேகத்தோடு பார்த்துப் பேசவாவது அனுமதி பெறலாம் என்று சிறைச்சாலைக்குச் சென்ற பாண்டியன், கண்ணுக்கினியாள், மாணவ நண்பர் கள் எல்லாருக்கும் இந்த நற்செய்தி எதிர்பாராத வியப்பை அளித்தது. உடனே ஒரு மாணவன் சைக்கிளில் விரைந்து பூக்கடைக்குச் சென்று மாலைகள் வாங்கிக் கொண்டு வந்தான். சிறை வாயிலில் விடுதலையான மூவருக்கும் பாண்டியனும் கண்ணுக்கினியாளும், கூடியிருந்த மற்ற மாணவர்களும் மாலையிட்டு வரவேற்றார்கள்.

“அண்ணன் நேற்றுத்தானே ஊரிலிருந்து வந்தீர்கள்? உங்களை ஏன் கைது செய்தார்கள்?” என்று மன வாளனைப் பாண்டியன் கேட்டபோது, “இந்த ஆட்சியில் காரணம் பார்த்தா மனிதர்களைக் கைது செய்கிறார்கள்?” வேண்டாதவர்களுக்கும், அரசியல் எதிரிகளுக்கும் எப்படி யாவது தொல்லை கொடுத்து அவர்களை அலைக்கழிக்க வேண்டும். அதற்காகவே பலரைக் கைது செய்கிறார்கள். அதற்காகவே பலர் மேல் பொய் வழக்குப் போடுகிறார்கள். கதிரேசன் முதலியவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு செஷன்ஸ் கோர்ட்டில் வரப்போகிறது. எப்படியாவது அண்ணாச்சியையும் அதில் மாட்டி வைக்கலாம் என்று பார்த்தார்கள். அண்ணாச்சியைக் கைது செய்தது கொடுமையினும் கொடுமை என்று குமுறிய காரணத்