பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 463

செய்ய வேண்டும். நமது பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக் கழகக் காம்பஸிற்கு உள்ளேயும், மற்ற மாணவர் கள், நகரின் தொழிலாளர்கள், பொதுமக்கள், பிறர் எல்லாம் பல்கலைக் கழக எல்லைக்கு வெளியேயும் போராட வேண்டும். ஆனால் எந்தப் போராட்டமுமே நடைபெறாது என்பது போல், வி.சி.யும், ஆர்.டி.ஒ.வும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நம்பி ஏமாறும்படி பட்ட மளிப்பு விழாத் தினத்துக்கு முதல் நாள் இரவு வரையில் நாம் தந்திரமாக நடந்து கொள்ள வேண்டும். அது முக்கியம்!” என்று மணவாளன் கூறியதும் ஒரு மாணவன் கேட்டான்.

“அவர்களாகவே நம்மேல் சந்தேகப்பட்டுக் கட்சி ஆட்களாகிய குண்டர்களையும், போலீஸ்காரர்களையும் இங்கே ஏராளமாகக் கொண்டு வந்து குவித்தால் என்ன செய்வது? அண்ணன் நினைப்பது போல் அவர்கள் ஏமாறவோ, சும்மா இருக்கவோ மாட்டார்கள். மல்லை இராவணசாமி கொள்கைகளை நம்பி அரசியல் நடத்திப் பழகாதவர். அடியாட்களை நம்பியே அரசியல் நடத்து கிறவர். மானம், மரியாதை, மதிப்பு என்று அவருடைய கட்சி அடிக்கடி கூறும் வார்த்தைகளை அவர்களே காப்பாற்றியதும் கிடையாது. பிறருக்கு அளித்ததும் இல்லை! குண்டர்களை நாம் எப்படி எதிர்ப்பது?

“எதிர்க்கவேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய கூட்டம் ஒரு வெள்ளமாகப் பெருகினால், நமது சத்திய ஆவேசமும், தார்மீகக் கோபமும், ஒரு பிரளயமாகத் திரண்டால் அதில் எல்லா எதிரிகளுமே தாமாக மூழ்கிப் போய் விடுவார்கள்” என்று கூறிய மணவாளன், கண்ணுக் கினியாளின் பக்கம் திரும்பினான். “சகோதரி! பெண்கள் படையைத் திரட்டும் பொறுப்பு உன்னுடையது. ஆண்கள் படையைத் திரட்டும் எங்கள் பாண்டியனைக் கவனித்துக் கொள்ள வேண்டியதும் உன் பொறுப்புத்தான்; லஞ்சமும், ஊழலும், எதேச்சாதிகாரமும் சுயநலமும் கொடுமைகளும் மலிந்துவிட்ட ஒர் ஆட்சியை எதிர்த்துத் தொடங்கும் இளைய தலைமுறையின் இணையற்ற பெரும் போர் இது.