பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 - சத்திய வெள்ளம்

இன்று இந்தப் போரின் தலைவன் நாளை உன் சொந்த வாழ்வுக்கும் தலைவனாக வேண்டியவன் என்று பேசிக் கொள்கிறார்கள். ஆகவே அவனையும் நீ பாதுகாக்கக் கடமைப்பட்டிருக்கிறாய். அவனும் உன்னைப் பாதுகாக்கக் கடன்பட்டிருக்கிறான்” என்று மேலும் சொல்லிவிட்டுப் பாண்டியனையும் அவளையும் மாறி மாறி நோக்கிப் புன்னகை பூத்தார் மணவாளன். இதைக் கேட்டு அங்கு கூடியிருந்த எல்லோருமே சிரித்துவிட்டார்கள். வெளியூர் மாணவர்களைக் கண்டு பேசி விளக்க உடனே பிரதி நிதிகள் பெயர்களைக் குறித்து அவர்கள் அங்கே போய் என்னென்ன செய்ய வேண்டும் என்பதும் விளக்கப் பட்டது. இதற்குள் அண்ணாச்சி நீராடி உடை மாற்றிக் கொண்டு திருநீறு குங்குமம் பளிச்சிடும் நெற்றியுடனும், தும்பைப் பூப்போல் வெளேரென்ற கதர் ஆடையுடனும் வந்து தோன்றினார். கூட்டத்தில் மின்னல் வந்து நிற்பது போல் நின்றார் அவர்.

“ரெண்டு நாளா அண்ணாச்சியை உள்ளே தள்ளி கடை வியாபாரம் எல்லாத்தையும் கெடுத்துப்பிட்டாங்க, பாவம்” என்றார் ஒர் ஊழியர்.

“அப்படிச் சொல்லாதீங்க தம்பீ! இந்தக் கடை, வியாபாரம் இதெல்லாமே எனக்குப் பெரிசு இல்லே. நான் செய்ய ஆசைப்படற தொண்டுக்கு இது ஒரு விலாசம். இது ஒரு சாக்கு. இதைச் சாக்காக வைச்சுக்கிட்டு நான் பொதுக் காரியத்துக்கு அலையிறேன். இதுக்கு முதலாளியாவோ, உரிமைக்காரனாவோ நான் என்னை நெனைச்சுப் பார்த்ததே இல்லை. நான் இதுக்குத் தர்மகர்த்தா. அவ்வளவுதான். எத்தினியோ மாணவர்கள் இங்கே என் கையாலே சிலம்பம் பழகினாங்க. ஆனா நான் சிலம்பம் ஆடி ஒரு நல்லவனைக் கெடுத்தது கிடையாது. நான் ஒரு தொண்டன். தொண்டு செய்கிறதற்குத் தடையாகிற அளவுக்குப் பெருமையும் உயரமும் எனக்கு வந்துவிடக் கூடாதே என்பது மட்டும்தான் நான் படுகிற ஒரே கவலை. வாழ்கிற வரை தொண்டனாக வாழ உறுதி பூண்டவன் நான் என்னைக்காவது நான் போயிட்டாலும் தொண்ட