பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பதாவது அத்தியாயம்

பட்டமளிப்பு விழா தினத்தன்று அங்கே நடக்க இருப்பதைக் காணச் சூரியனுக்கும் அதிக ஆவலோ என்னவோ, அன்று மல்லிகைப் பந்தலில் மிகவும் விரைவாகவே பொழுது விடிந்து விட்டாற் போலிருந்தது. நகர் எங்கும் மந்திரியை வரவேற்கும் வளைவுகளை நிரப்பியிருந்தார் இராவணசாமி. இதயத்தின் இமயமே வருக, தமிழர் தானைத் தலைவனே வருக என்றெல்லாம் அர்த்தமில்லாத வாசகங்கள் வளைவுகளை அலங்கரித்து எழுதப்பட்டிருந்தன. காலையில் வருவதாகப் பத்திரிகை களில் செய்தி பிரசுரிக்கச் செய்துவிட்டுக் கறுப்புக்கொடி காட்டுகிறவர்களுக்குப் பயந்து முதல் நாள் இரவு ஒரு மணிக்கே இரகசியமாகப் பல்கலைக் கழக விருந்தினர் மாளிகையில் வந்து காதும் காதும் வைத்தாற்போல் தங்கி விட்டார் அமைச்சர் கரியமாணிக்கம், ஊர் எல்லையில் காலையில் கறுப்புக்கொடி காட்டத் திரண்டுபோய் நின்ற தொழிலாளர் கூட்டமும் மாணவர் கூட்டமும் மந்திரி தங்களை ஏமாற்றிவிட்டு இரவோடு இரவாகவே வந்து சேர்ந்திருக்கிறார் என்று அறிந்ததும் கோபம் அடைந்து வரவேற்பு வளைவுகளைச் சாய்த்துக் கொண்டும், மந்திரிக்கு எதிரான கோஷங்களை முழக்கிக் கொண்டும் பல்கலைக் கழக வாயிலை நோக்கிப் படையெடுத்தது. அந்தச் சமயம் பார்த்து அங்கே காரில் வந்த கவர்னரும், கல்வி அமைச்சரும், வேறு சில அமைச்சர்களும் துணை வேந்தரும் அந்தக் கூட்டத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தது. போலீஸார் அவர்களைச் சிரமப்பட்டுக் கூட்டத்திலிருந்து விலக்கி பல்கலைக் கழகத்துக்கு உள்ளே அனுப்ப வேண்டியதாயிற்று. முதல்நாள் இரவு வரை எதுவுமே நடக்காது என்று நினைத்ததற்கு நேர்மாறாகப் பல்கலைக் கழக எல்லை முழுவதும் பயங்கரமாக மாறி இருந்தது. ‘தகுதியற்றவர்களுக்கு டாக்டர் பட்டம் ஒரு கேடா என்று சுவர்களிலும் தார் ரோட்டிலும் எழுதியிருந்தது. ஓர் இடத்தில் இப்படிக்கூடப் பெரிதாக எழுதியிருந்தார்கள். ‘கீழ்க்கண்ட முகவரியில் ஞானசூன்யங்களுக்கும், கொடுங் கோன்மையாளர்களுக்கும் டாக்டர் பட்டம் மிகமிக மலிவாகக் கிடைக்கும். விவரங்களுக்கு விண்ணப்பிக்க