பக்கம்:சத்திய வெள்ளம்.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 507

அடுத்துப் பாண்டியன் பேச எழுந்தான்: “மகாத்மா காந்தி சுடப்பட்டு புதியவன் திரும்பிப் போய்விட்டான்” என்ற தலைப்பில் அன்று நவநீத கவி பாடிய கவிதையை இப்போது உங்களுக்குச் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். அது இன்று நம்மிடையே இருந்து பிரிந்துவிட்ட அண்ணாச்சிக்கும் பொருந்தும்.

காதுகள் இருந்தும் கேளாமல் கண்கள் இருந்தும் பாராமல் விதிகள் இருந்தும் நடவாமல் விவேகம் இருந்தும் புரியாமல் பேதைகள் நிறைந்த பொதுவினிலே புதியவன் ஒருவன் வந்துநின்றான் சாதிகள் மறைந்த சமதர்மம் சத்தியம் மிகுந்த பொதுத் தொண்டு நீதிகள் அறிந்த பெரு நெஞ்சம் நேர்மைகள் தெரிந்த மரியாதை வேதியர் அறியா மெய்ஞ்ஞானம் மிகவும் மலர்ந்து சிரித்தமுகம் யாவையும் இருந்தும் கொன்றுவிட்டார் யாதும் அறியா மந்தையிலே பூமியில் வந்தது பிழைஎன்றே புதியவன் திரும்பிப் போய்விட்டான்.” இந்தக் கவிதை மாணவர்களைக் கண்கலங்க வைத்து விட்டது. அடுத்துப் பேச வந்த கண்ணுக்கினியாள் பேச வார்த்தைகள் வராமல் கதறி அழுதபடி “நோ. ஐ காண்ட்.” என்று அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

“வீ ஹாவ் லாஸ்ட் ஏ கிரேட்மேன்” என்று தொடங் கிப் பூதலிங்கம் ஆங்கிலத்தில் ஐந்து நிமிஷம் பேசினார்.

“ஏசுபெருமானைப் பாவிகள் சிலுவையில் அறைந்தது போல் இந்தப் புண்ணிய புருஷனையும் பாவிகள் கொன்று விட்டார்கள்” என்றார் பேராசிரியர் தங்கராஜ். மேலும் பலர் அண்ணாச்சியைப் புகழ்ந்து பேசினார்கள்.