பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட அகத்தியர்




அறிஞர் அண்ணாவா? யாரவர்? அவரோர்
இலக்கியக் குறும்பலா; இருமொழிக் கொண்டல்;
தீந்தமிழ் பரப்பும் திராவிட அகத்தியர்.
நற்றமிழ் என்னும் பளிங்குத் தூணில்
சிற்றுளி வேலை செய்யும் சிற்பி.
அடிவைத் தேறி அரங்கில் நின்று
பொடிவைத்துப் பேசும் புத்தகப் பிரியர்.
கலைஞரின் கைவிளக்கு; கள்ள மறியா
நாவலர் நாக்கு; நாட்டில் புரட்சிப்
பாவலர் களுக்குப் பணத்தின் தூக்கு.
பகுத்தறி வென்னும் பாசறை விட்டுக்
கள்ளரை நோக்கித் துள்ளி வரும்வேல்.
தொட்டால் சிந்தனை தெறிக்கும் ஈரோட்டுப்
பட்டறை தந்த கட்டிப் பிளாட்டினம்.
எட்டி வரும்பகைக் கீட்டி; நண்பரைக்
கட்டித் தழுவும் காஞ்சித் தென்றல்.
சட்ட சபைமாப் பிள்ளை; அறிஞர்
பட்டந் தாங்கிய பைந்தமிழ்க் களிறு.