பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

29




பழுதில் லாத இலக்கணப் பாங்கும்
இழுமென் றிசைக்கும் விழுமிய ஓசையும்
என்புநெக் குருகி அன்பரா குதற்குக்
கண்கள் நீர் சோரக் கழறுவா சகமும்
தன்பால் பெற்றுத் தழைத்த செந்தமிழ்
ஆண்டவன் தொழுகைக்கு வேண்டா மொழியாம்!
நீரில் ஏறி நெருப்பில் நின்று
பாரோர் வியக்கத் தன் புகழ் நிறுத்தியும்
திருமறைக் காட்டுக் கதவம் திறந்தும்
திறந்த கதவை மூடியும், ஆண்பனை
பெண்பனை யாகப் பேரருள் புரிந்தும்
என்புபெண் ணாக்கியும் கண்குறை போக்கியும்
முதலை யுண்ட குதலையை மீட்டும்
வீசு பெருங்கனற் காளவாய் தன்னை
மூசு வண்டறை பொய்கையாய் மாற்றியும்
உப்புக் கடலில் பாய்ச்சிய பாறையைத்
தெப்ப மாக்கி மிதக்க வைத்தும்
மறைகள் முழங்கும் ஆரூர் வீதியில்
இறைவனைத் தன் பின் நடக்க வைத்தும்
வல்லமை காட்டிய வண்டமிழ் மொழியில்
இல்லாத தெய்வத் தன்மை, ஆரியச்
சொல்லில் என்ன சொட்டு கின்றதோ?
மூச்சுத் தளர்ந்து முடித்தலை நரைத்துப்
பேச்சு வழக்கும் பெருமையும் குன்றிச்
சிதையில் ஏறிய சீதை மொழிதான்
அற்புதம் நிகழ்த்துமோ? அந்தநாள் தொட்டுக்
கற்புக் கெடாமல் கலைகள் வளர்க்கும்
கண்ணகி மொழிக்கப் பெருமை யில்லையோ?